பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

448

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அறிவுப் புரட்சி, அறிவுப் புரட்சி என்று அடித்துக் கொள்கிறாயே, அறிவில் மட்டும் புரட்சி ஏற்பட்டால் போதுமா? இப்போது என்னை எடுத்துக் கொள், எனக்கு இந்த மூட நம்பிக்கைகளில் ஒன்றும் நம்பிக்கை இல்லை. மனிதனை மனிதனாகத்தான் நேசிக்கிறேன். இதனால், என் வாழ்க்கை மேம்பட்டு விட்டதா?

சொர்க்கத்தில் இருக்கிறோம் என்று நினைத்துக் கொள்வதால் மட்டும் ஒருவன் சொர்க்கத்துக்குப் போய் விட முடியுமா? அறிவு வேண்டும்; அந்த அறிவின் கொள்கை வெற்றி பெற நடைமுறைப் போராட்டம் வேண்டும். இல்லா விட்டால் ஒன்றும் நடக்காது என்று ஓர் உரையாடலில் கூறுகிறார். இது நமது கவனத்திற்குரியது.

அறிவு, உணர்வைத்தான் தரமுடியும். ஆனால், வாழ்வியல் நடைமுறைதான் வெற்றியைத் தரமுடியும். கொள்கையும் நடைமுறையும், சிந்தையும் செயலும் ஒன்றுபட்டால்தான் காரியங்கள் நிறைவேறும்! துன்பம் அகலும், இன்பம் வந்தடையும்! அறிவை, உணர்வை நடைமுறைக்குக்கொண்டு வரும்பொழுது மானிடத்திற்கு உழைப்பு அறிமுகமாகிறது.

ஆம்! உலகத்தை இயற்றும் உன்னதமான ஆற்றல் உழைப்பிற்கு உண்டு. உழைப்புக்கு ஈடாக உலகத்தில் பிறிதொன்றில்லை! உழைப்பே உலக வரலாற்றில் உயிர்ப்பு! "கைவருந்தி உழைப்பவர் தெய்வம்" என்றான் பாரதி! எங்கே உழைப்பிருக்கிறதோ, அங்கே மனத்திற்கு ஊசலாட்ட மில்லை!

உழைப்புள்ள இடத்தில் மனம் தூய்மையாக இருக்கும். உழைப்பாளர் மனம், இறைவனின் சந்நிதியாகும். உழைப்பாளிகள் வாழ்வர்; வாழ்வித்து வாழ்வர், உழைப்பாளிகள் யாரொருவருக்கும் தீங்கு செய்யார். இக்கருத்துக்களை அழகுற விளக்கும் பாடல் ஒன்று இதோ:

"உழைக்கின்ற நோக்கம் உறுதியாயிட்டா
கெடுக்கிற நோக்கம் வளராது - மனம்
கீழும் மேலும் புரளாது"