பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அணிந்துரை
தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார்.
பேரூராதீனம்.

தமிழகத்தில் அருள்நெறிச் சிந்தனையை நெறிப் படுத்தியவர் தமிழ் மாமுனிவர். அருள் நெறித் தந்தை எனப் போற்றப்படும் திருவண்ணாமலை ஆதீனம் தவத்திரு குரு மகாசந்நிதானம், தெய்வசிகாமணி அருணாசல பரமாச்சாரிய தேசிகராகிய குன்றக்குடி அடிகளார் ஆவார்கள். அவர்களது அருளுரைகள் நிரந்தினிது சொல்லியவாகும். மொழிக்கு மொழி தித்திக்கும் மூவர் மொழியும் திருவாசகமும் அவர்களது சிந்தனையில் ஆழப் பதிந்தவை. பக்தி இலக்கியமாக, சமயநூலாக அமைந்த அவற்றின் செழுமையை உணர்ந்து, அவற்றில் செறிந்துள்ள செம்மணித் திரள்களை வெளிப்படுத்திய சிந்தனையாளர் அடிகளார்.

திருநெறிய தமிழ் என்பதைச் சொல்லோவியமாக வழங்கியவர். துதிசெயும் நாயன்மார் தூய சொல்மலர் மொழிகளை நுகர்ந்த புனிதர்; வாழ்வோடியைந்த சமயநெறி வளத்தை நுகர்ந்து தேனாய், இன்னமிழ்தமாய்த் தித்திக்கத் தந்த நூல் ‘சமய சிந்தனை’. இது பல தொகுப்பாக வெளிவருவது தமிழ் கூறும் நல்லுலகிற்குக் கிடைத்த கருவூலம் எனலாம். ஆழ்கடலில் முத்தெடுப்பது போலத் திருமுறைப் பாடல்களில் அமைந்துள்ள திட்ட நுட்பம் செறிந்த சொற்களை எடுத்து வழங்கும் பாங்கு அடிகளாருக்கே கைவந்த கலை.

தவத்திரு அடிகளாருடன் தொடர்ந்து பழகும் வாய்ப்புக் கிடைத்தது. ஆதீனப் பொறுப்பேற்ற காலந் தொட்டுப் பேரூராதீனத் தொடர்பை வளப்படுத்தி நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார்கள். தமிழகத்திலும் கடலுக் கப்பாலும் நடமாடிய நற்றமிழ் முனிவர். செல்லும் இடங்களுக்கெல்லாம் அழைப்பார். ஒருங்கிருந்து உகந்து பேசிச் சமயநெறியின் பிணைப்பை வளப்படுத்திய குணக்குன்று. தமிழகத்தின் ஊர்கள் தோறும் திருவீதி வலம் வருதல். அன்பர்களுடன் கலந்துரையாடல் ஆகியவற்றில் பங்கு கொள்வோம். பல்லக்குப் பவனியை ஒதுக்கிவிட்டுத் தெருத் தெருவாக வலம் வந்து, தெருமுனைக் கூட்டங்கள் நடத்தினோம். கூட்டங்கள் நடந்த போதெல்லாம் அடிகளார் நட்பு உடனிருந்து பிரித்தறிய முடியா பெருங்கிழமை நட்பாய் மலர்ந்தது. சமுதாயச் சிக்கல், சமய நெறிச் சிக்கல் ஏற்படும் போதெல்லாம் அழைத்துக் கருத்துக்களைக் கேட்கும் ஆரா அன்பினர். அரசியல் சூழல்களால் ஏற்படும் கலக்க நிலையில் முடிவும் இடையூறும் முற்றியாங்கெய்தும் படுபயனும் இதுவென உசாவிய மாண்பினர். இது எமது வாழ்வில் ஏற்பட்ட மறக்க முடியாத சிறு குறிப்புக்கள். அவர்களது எளிமையும் இனிய பண்பும் நெஞ்சை விட்டு என்றும் நீங்காது இருப்பது. கடவுளியல் தண்ணளியுடையது; வேறுபாடுகளைக் கடந்தது; விழுமிய ஒருமைப்பாடுடையது. தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்தல் எனும் கோட்பாடு திருநீலகண்டர் காட்டும் நெறி என வழங்கியுள்ளார்.