பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.சமயசிந்தனை நூலுக்குள் நுழைவோம். ஆளுடைய பிள்ளையார் பாடலில் “நீதியால் தொழுக” என்பது ஒருதொடர். இன்றைய வழிபாட்டின் முரண்பாடுகளை எடுத்துக்காட்டி, சடங்குகளாலும் பகட்டுகளாலும் தொழும் சூழல் மாறவேண்டும். சமயவாழ்க்கை அகநிறை அன்பால், அருளார்ந்த சீலத்தால், நீதியால் என்று முழுமை பெறுகிறதோ அன்றே தொழுதல் நலம் பெறுகிறது என ஆய்ந்து உணர்த்தப்படுகிறது.

“நீதியால் தொழுமின் உம்மேல் வினை நில்லாவே” என்பது மறைமொழி. சமயச்சார்பற்ற ஒழுக்க நெறி, ஊற்றுக்கள் இல்லாத ஓடைபோன்றது என்பதைப் பொழுதுபோக்கிப் புறந்திரிவார் உணர வேண்டும் என்பார் அடிகளார்.

கடவுளியலைப்பற்றி உணர வேண்டும். “உண்ணற்கரிய நஞ்சையுண்டு ஒரு தோழம் தேவர் விண்ணிற்பொலிய அமுதளித்த விடையூர் விம்லனை” நுண்ணறிவால் வழிபாடுசெய்ய வேண்டும் என விளக்கும் பாங்கு மெய்மை உணர்வடைய்த் துணையாகிறது.

வழிபாடு சடங்கல்ல; அது உயிரியல் முறை. உயிர்வளர்ந்து வாழுதலே வழிபாட்டின் பயன். நாள்தோறும் வழிபடவேண்டும். வழிபடவேண்டிய முறையைப் பயின்று அறிந்து கொள்ளுதல் வேண்டும் என்பதைப் “பரவு முறை பயிலும் பந்தர்சொன்மாலையை” உணர்த்தும் பாங்கு திருநெறிய தமிழுக்கு வளந் தருவதாகிறது.

திருநாவுக்கரசர் அருளிய திருமுறைகள் ஓதத்தக்கன; உணரத்தக்கன; சமுதாய நலம் சார்ந்தன; அவர் விழியில் நடந்தால் சமுதாயம் வளரும் எனத் தமது ஆழ்ந்த உள்ளக்கிடக்கையை அடிகளார் வெளிப்படுத்தியுள்ளார். “மெய்மையாம்” என்னும் தேவாரத்திற்குத் தரும் விளக்கம்: ஆன்மதரிசனம், சிவதரிசனம், ஆன்மசுத்தி பெறலாம். கடவுள் உயிர்ப்பாய் புறம் போந்து புக்கு ஆட்டுவிக்கிறான். அந்நிலை சிவபோதம். பின் பக்குவம் வந்துழி அவனுக்குள்ளேயே ஒளிந்து கொள்கிறான். அந்நிலையே சிவயோகம் என்று விளக்கியுள்ளமை உணரலாம். இங்கர்சால், பிளேட்டோ, சாக்ரடீஸ் போன்ற அயல் நாட்டறிஞர்களைச் சுட்டிக்காட்டி அவரினும் சமுதாய சீர்திருத்தத்திற்குத் தகைசான்றவர் அப்பர் அடிகள் என்கிறார்.

அப்பரடிகள் அருளியவை ஆகமநெறி. மெய்யியல் கூறுபாடுகள். புலன்பொறி மயக்கச் சூழல்கள் ப்ற்றிய செய்திகளை விளக்குவதுடன் வழிபாட்டு நெறியில் ஏற்றத் தாழ்வுகளைச் சாடும்பான்மை, வெளிப்படுத்தும் சொல்திறன் ஆழம் உடையது; ஆக்கம் தருவது.

“மனிதர்காள் இங்குவம் மொன்று சொல்லுகேன்” என்னும் அறைகூவலின் பின்புலம் அன்றும் வாழ்வியல் நெறியைக் கேட்போர் அருகியிருந்தனரோ என்னும் ஐயத்திற்குரிய நோக்கில் விளக்குகிறார். அடிகளார் கூறும் சிந்தனைவளம் போற்றத்தக்கது.

அடிகளார் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த சமயத் தலைவர். திருக்கோயில்களும் வழிபாட்டு நெறியும் மனித சமுதாயத்தை உயர்த்துவதற்கு அமைந்தன. அப்பணியைத் திசைதிருப்பிய காலச் சூழல்களையும் அயல் மரபுகளையும் சாடி மென்மையுணர்வுடன் வெளிப்படுத்தி இளைய தலைமுறையினர்க்கு வழிகாட்டிய ஞானச் செல்வர். வாழையடிவாழையாக வரும் திருமரபு, செந்தமிழ் மரபு செழிக்க முயல்வோம்.