பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/169

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அப்பர் விருந்து
165
 

துறவு. அவருக்கு நாட்டு மக்களின் நல்வாழ்விலே மிகச் சிறந்த ஈடுபாடு இருந்தது. இந்த நிலைமையை நாம் எண்ணிப் பார்க்கின்ற பொழுதுதான் அப்பரடிகளுக்குச் சமய வாழ்வில் ஏற்பட்ட சமுதாய உணர்வை நாம் உணர முடிகிறது.

யாம் வணங்கும் கடவுளார்

பொதுவாக, மனித வாழ்க்கையில் இருக்கின்ற தவறுகளை நீக்க வேண்டுமானால், முதலில் அவனைச் சமுதாய மனிதனாக்க வேண்டும். சமுதாயத்தை விட்டுத் தனித்து ஒதுங்கி வாழும் மனிதன் தொடர்ந்து தவறுகளை இழைத்துக் கொண்டேதான் போவான். எவன் ஒருவன் துணிவாகச் சமுதாயக் கூட்டு வாழ்க்கையை - பத்துப்பேர் மத்தியிலே வாழுகின்ற வாழ்க்கையை ஏற்றுக் கொள்கிறானோ, அவன் காலப்போக்கில் திருந்திவிடுவான்.

ஒருவன் ஆவுரித்துத் தின்றுழலும் புலையனாகவே இருந்தாலும், அவன் சான்றோர்கள் - அடியார்கள் மத்தியிலே வாழக்கூடிய சமுதாய வாழ்க்கையை மேற்கொண்டு விடுவானானால், சமுதாயத்தில் வாழுகின்ற மற்றவர்களைப் பார்த்து - தன்னினும் மூத்த சான்றோர்களைப் பார்த்து - அவர்கள் வாழும் முறைகளைக் கவனத்தில் கொண்டு, அவன் இதுதான் நல்ல வாழ்க்கை போல் இருக்கிறது என்று கருதி “ஆவுரித்துத் தின்னுகின்ற” பழக்கத்திற்கே முழுக்குப் போட்டுவிடக் கூடும். இதனை நன்றாக உணர்ந்தவர் நமது அப்பர் அடிகள்.

எனவேதான்,

அங்கமெலாம் குறைந்தழுகு
தொழு நோயராய்
ஆவுரித்துத் தின்றுழலும்
புலையரேனும்