பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


எண்ணினால் தன்னைச் சார்ந்தவர்களைக் கொண்டு செய்விப்பதே தக்கதாகும். அதுபோல் இறைவனும் தக்க வரை - செல்வரைக் கொண்டு செய்விப்பான். கண்ணுள்ளவரைக் கொண்டு கண்ணில்லார்க்குத் துணை செய்விப்பதும் இம்முறையேயாகும். ஆனால் இன்று நமது சமயம், உற்றார் உறவினர் இல்லாத அனாதைகளுக்கு உறுதுணையாக இல்லை. எல்லா வசதிகளும் வாய்ப்புகளும் உள்ளவர்க்கே மேலும் மேலும் பரிவு காட்டுவதாக - மரியாதை கொடுப்பதாக இருக்கிறது.

அன்பே பொருள்

அடுத்து, ‘அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்வானை’ என்று பேசுகிறார். அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள் செய்வது சமயத்தின் இயல்பு. சேக்கிழார் அருளிய பெரிய புராணத்தில் இறைவன் பல்வேறு சூழ்நிலைகளில், அற்றார் போல, அலந்தார் போலக் கோலம் கொண்டு மண்மீதில் எழுந்தருளி வந்ததைக் காண்கிறோம். “சிவபெருமான்” என்ற திருக்கோலப் பொலிவோடு அவர் வரவில்லை. அவர், அற்றார்போல; அலந்தார்போல வந்தபோதும் உரிய மதிப்பும் வரவேற்பும் கிடைத்தன அடியார்களின் இல்லங்ளிலே! இன்று இறைவனே அற்றார்போல, அலந்தார் போல வந்தால் அவனுக்கு ஒரு பிடிசோறு கிடைக்குமா என்பது ஐயப்பாடு தான்! நிலைமை அந்த அளவிற்கு மாறிவிட்டது. அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள் செய்கின்ற, உற்றார் இல்லாதார்க்கு உறுதுணையாகின்ற அந்த உயர்ந்த சமய ஒழுக்கம் பரவவேண்டும். எல்லார்க்கும் கொடுப்பதுதான் வாழ்க்கையின் நோக்கம். அதுதான் சமுதாய ஒழுக்கம். அங்குதான் சமுதாயப் பண்பு வளர்கிறது. ஏழாம் நூற்றாண்டில் அப்பரடிகளிடத்தே இந்த உயர்ந்த சிந்தனை தோன்றியதை நாம் பார்க்கிறோம்.