பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/173

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அப்பர் விருந்து
169
 


பொதுவாக, மனிதன் ஒருவன்தான் வாழ்க்கையென்ற இலட்சியத்தோடு போராடுகின்றான். பிறரோடு மனங்கலந்து பேசி, அன்பு கலந்து உறவாடி, கூடி வாழ்வதே மனித குலத்தின் உயர்ந்த லட்சியம்! மனிதனைத் தவிர ஏனைய உயிரினங்கள், தோன்றிய சில காலம் வரை சார்ந்து வாழ்கின்றன. பின் தத்தம் வாழ்க்கையைத் தாமே பார்த்துக் கொள்கின்றன. அதனால் அவைகளுக்குச் சார்பின் மேன்மையும் நன்மையும் தெரியவாரா. மனிதன் பிறந்த நாள் தொட்டு இறக்கும் வரையும் சார்புடனே வாழ்கின்றான்; அதனால் கடவுள் சார்பையும் நாடுகின்றான்.

அன்பலால் பொருளுமில்லை
ஐயன் ஐயாறனார்க்கே

என்று அப்பரடிகள் குறிப்பிடுகிறார். ஐயாறப்பர் நாம் கொண்டுபோகும் தேங்காய்ப் பழத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை; நாம் உண்மையிலேயே அன்புடையவர்களாக மெய்யன்புடையவர்களாக இருக்கிறோமா? என்றுதான் அவர் பார்க்கிறார். அன்புதான் மனிதனை வளர்க்கிறது. அன்புதான் மற்றவர்களுக்கு உதவி செய்யவேண்டும் - மற்றவர்களை நாம் மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணத்தை எழுப்புகிறது. அன்பில்லையானால் தன்னல வெறியே தலைதூக்கி நிற்கும். அன்பு இருந்தால் சமுதாயப் பற்று, தலைதூக்கி நிற்கும். கடவுளுக்குப் படைக்கும் அமுதும் தூய அன்பேயாகும். அறவாணர்க்கு அன்பென்னும் அமுது படைத்து வழிபட்டார் வாயிலார். “நடமாடுங் கோயில் நம்பர்க்கொன்றீவதே, படமாடுங் கோயில் பரமர்க்கு ஈவது” என்றார் திருமூலர். நடமாடுங் கோயில், நல்ல சமுதாயமேயாகும்.

சாதாரணமாகச் சில விலங்குளையும், செடி கொடிகளையும் நாம் பார்க்கிறோம். அவை மக்கட் சமுதாயத்திலிருந்து பெற்றுக் கொள்வது மிக மிகக் குறைவு. ஆம்; அவை