பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/174

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
170
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
 

பெற்றுக் கொண்டதைப் போன்று பன்மடங்கு பயனைத் திருப்பிக் கொடுக்கின்றன. ஒரு கறவை மாட்டை எடுத்துக் கொள்வோம். அது ஒரு ரூபாய் மதிப்புள்ள தீனி தின்றால், இரண்டு அல்லது மூன்று ரூபாய் மதிப்புள்ள பாலை நமக்குத் தருகிறது; ஒரு தென்னை மரம்! அதற்கு நாம் செலவழிப்பது எவ்வளவு, அது நமக்குத் திருப்பித் தருவது எவ்வளவு, என்று நீங்களே எண்ணிப் பாருங்கள். இப்படி விலங்குகளும், செடி, கொடி, மரங்களும் சமுதாயத்திலிருந்து சிறிதளவு பெற்றுக் கொண்டு, பெருமளவு திருப்பிக் கொடுக்கின்றன. மனிதனோ சமுதாயத்திலிருந்து பெருமளவு பெற்றுக் கொள்கிறான்; சிறிதளவு திருப்பித்தரக்கூட, விருப்பங் கொள்ளாது வெட்கப்படுகின்றான். அப்படி ஏதேனும் கொஞ்சம் கொடுக்கத் தயாரானாலும் கொடுக்கும் அளவிற்கதிகமான பாராட்டை அவன் பெற விரும்பும் நிலையைப் பார்க்கிறோம். சமுதாயத்திற்கு நிரம்பக் கொடுக்க வேண்டும். அதுதான் சிறந்த சமுதாயப் பண்பு; தூய அன்புடையவர்களின் இலட்சியம்.

கங்கை ஆடிலென்?

அப்பரடிகள் பல ஆரவாரச் செயல்களை, போலிச் சடங்குகளைத் தம் பாடல்களில் சற்றுக் கடுமையாகவே சாடிச் சொல்கிறார்.

கங்கை ஆடிலென்?
காவிரி ஆடிலென்?
பொங்கு தண்கும
ரித்துறை ஆடிலென்?
ஓங்குமா கடல்
ஒதநீர் ஆடிலென்?
எங்கும் ஈசன்
எனாதவர்க் கில்லையே!