பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/175

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அப்பர் விருந்து
171
 

என்று கேட்கிறார். நீ கங்கையில் போய் நீராடி வந்திருந்தாலும் காவிரியில் போய் நீராடி வந்திருந்தாலும் என்ன பயன்? எங்கும் ஈசன் இருக்கிறான் - எவ்வுயிர்க்குள்ளும் ஈசன் உறைகிறான் என்பதை நீ உணரவேண்டும்! உயிர்களிடத்து அன்பு செய்தல்வேண்டும் என்று வலியுறுத்துகிறார். ஓவியத்தை உதாசீனப்படுத்திவிட்டு, ஒதுக்கித் தள்ளி விட்டு, ஓவியனைப் பாராட்டுவதில் என்ன பொருள் இருக்கிறது? இப்படிச் செய்வதால் ஓவியனைத் திருப்தி படுத்திவிட முடியுமா? கவிதையைக் கழிவுக் கூடையில் போட்டுவிட்டுக் கவிஞனைப் பாராட்டுவதில் என்ன பொருள் இருக்கிறது? அப்படிச் செய்வதால் கவிஞன் திருப்தி அடைந்து விடுவானா? படைப்புக்கு நாம் வழங்குகிற பாராட்டுக்கள் தாம் ஓவியனுக்கும் கவிஞனுக்கும் நாம் செய்கிற சிறப்பு.

குழந்தைக்கு நாம் அளிக்கிற பாராட்டுத்தான் அக்குழந்தையின் தாய்க்கு நாம் செய்கின்ற சிறப்பு. இதுதான் உலக இயல்பு. ஆனால் நமது சமுதாயத்தில் இன்று நடப்ப்தென்ன? இறைவனுக்கு எல்லா வகையான சிறப்புக்களும் செய்கின்றோம். ஆனால் இறைவனின் உடைமையாக - உறைவிடமாக, இறைவனை உணர்த்தும் பிரதிபிம்பமாக - நிழற்படமாக இருக்கின்ற மனித சமுதாயத்தை - மனித உயிர்களை - மனித குலத்தைப் புழுதியிலே புரள விட்டுட்டு, சாக்கடையிலே மிதக்கும் புழுக்களைப் போலத் துடிக்க விட்டுட்டு மனித குலத்தின் அப்பனாக - அம்மையாக - அன்புடைய மாமனும் மாமியுமாக - ஒண்பொருளுமாக விளங்குகிற இறைவனை எப்படித் திருப்திப்படுத்த முடியும்? சிறப்புச் செய்யமுடியும்?

கையூட்டுக் கேட்பவரா கடவுள்?

கடவுளைச் சிலர் பயங்கரப் பொருளாக்கிவிட்டார்கள். இறைவனிடத்துப் பக்தியும் பரிவும் கொள்ளவேண்டும். கடவுளைக் கும்பிடாவிட்டால் நரகம் கிடைக்கும் என்று