பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/183

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அப்பர் விருந்து
179
 

பக்தி இயக்கம் உணர்ச்சியைத் தொடுவதாக மாறினால் சிறந்த ஒருமைப்பாடு விரைவில் மலரும் என்பதில் ஐயமில்லை.

எங்கே இறைவன்?

இதற்கு அடுத்தபடியாக, எங்கே இறைவன் இருக்கிறான்? அவனை எங்கே போய்த் தேடுவது என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டு அப்பரடிகள் பேசுகின்றார். அழகான ஓர் உவமை வாயிலாக இதனை அப்பரடிகள் விளக்குகின்றார்.

விறகுக் கடையிலே விறகைப் பார்க்கிறோம். அந்த விறகில் நெருப்புத் தெரிகிறதா? நெருப்புத் தெரியவில்லை. அதனாலேயே அதில் நெருப்பு இல்லை என்று கூறிவிட முடியுமா? விறகிற்குள், நெருப்பை உண்டாக்கும் சக்தி இருக்கிறது. பாலில் நெய் தெரிகிறதா? தெரியவில்லையே. அதனாலேயே பாலில் நெய் இல்லை என்று கூறிவிட முடியுமா? விறகில் தீ மறைந்திருப்பது போல, பாலில் நெய் மறைந்திருப்பது போல மாமணிச் சோதியனான இறைவன் எங்கும் மறைந்திருக்கிறான். ஒன்றோடொன்று சேரக் கடைந்து வெண்ணெய் எடுத்து நெய்யைக் காண்பது போல உறவுக்கோல் நட்டு உணர்வென்னும் கயிற்றினால் முறுக வாங்கிக் கடைந்து இறைவனைக் காண முடியும் என்கிறார் அப்பரடிகள்.

விறகில் தீயினன் பாலில்படு நெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவுக்கோல் நட்டு உணர்வுக் கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே!

என்கிறார். “உறவுக்கோல் நட்டு” என்கிறார். இப்போது கடவுளை நெடுந்தொலைவிலே வைத்திருக்கிறோம். குருக்கள் கடவுளா? கோயில் கடவுளா? என்ற மயக்கம் பலருக்கு