பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/223

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அப்பர் விருந்து
219
 

அது மட்டுமின்றி ஒருவர் உண்பதை உடனிருப்பவன் விரும்புகிறான் என்பது தெரியாது போனால், உண்பவனுக்கு அவனையறியாமலே ஐய உணர்வும், கூச்சமும் தலை காட்டுகின்றன. அதன் காரணமாகத் தயங்கித் தயங்கி உண்கிறான். அப்பொழுது அவன் உள்ளத்தில் மகிழ்வுணர்வு இல்லாமற் போகிறது. உள்ளத்தில் மகிழ்வுணர்வு இல்லாமல் உண்ணும் உணவு, நஞ்சாக மாறி விடுகிறது. அதனால் நலம் கெடுகிறது; நோய் வந்தமைகிறது.

ஆதலால், உண்ணும்பொழுது உரையாடாது உண்ணுதல் நல்ல வழக்கமன்று; ஒழுக்கமன்று அறநெறியுமன்று; வாழ்வாங்கு வாழும் நெறியுமன்று; உடலியலில் பேணும் நெறியுமன்று. அதனாலன்றோ, தாயுமானார் “உறவு கலந்து உண்ணக் கண்டீர்” என்று எடுத்தோதினார். உறவு கலக்க உரையாடல் இன்றியமையாதது. ஆதலால், பலர் கூடி - உண்ண வேண்டும். உறவு கலந்து உண்பித்துச் சிரித்துப் பேசி மகிழ்வு சிறக்க உண்ண வேண்டும். ஆனால் உண்ணும் பொழுது உரையாடலை ‘அரட்டைக் கச்சேரி'யாக மாற்றிவிடக் கூடாது. பயனற்ற சொற்களைப் பலர் கூடி உண்ணும் பந்தியில் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

அதுமட்டுமின்றி உணர்ச்சி வசப்படுத்தக் கூடிய, அவல உணர்வுகளைத் தரக்கூடிய செய்திகளை மறந்தும் பேசக் கூடாது. இது நேர்மாறான பயனைத் தந்துவிடும். உண்ணும் நேரம் குற்றங்குறைகளை உணர்த்தவன்று. உண்ணும்பொழுது மனித இயலைத் தூண்டி உயர்த்துதற்குரிய மகிழ்வும் ஊக்கமும் தரத்தக்க செய்திகளையும், உயர்வு தாழ்வுகளை விரிவுபடுத்தாத உறவு நெறிகளையும் காட்டிப் பேசுதல் வேண்டும். இத்தகைய உரையாடலோடு கலந்துண்ணும் பழக்கம் நமது குமுகாய வழக்கம். இந்த இனிய வழக்கம் மீண்டும் நமது குமுகாயத்தில் மலர்வதாக.