பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

242

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மனிதர்கள் உண்டு. படைக்கலம் தாங்காமலே கூடச் செருக் களத்தில் நின்ற வீரர்களுண்டு. அப்பரடிகள் படைக்கலம் தாங்கிய வீரரா? வில்லைத் தாங்கினாரா? வாளைத் தாங்கினாரா? இல்லை! அவருடைய நெஞ்சத்தைப் பழுதிலாத் துறவு என்ற அரணில் சேர்த்தார்; அங்கே நிலைநிறுத்தினார்; ஒடும், செம்பொன்னும் ஒக்கவே நோக்கினார். ஒண் திறல் பிறந்தது. இறைவன் திருநாமமாகிய ஐந்தெழுத்தையே நாவினில் படைக்கலமாகக் கொண்டார். கோட்டை கொத்தளங்கள் பெற்றுக் கொடிகட்டி ஆண்ட பல்லவப் பேரரசை வெற்றி கண்டார். “அஞ்சுவது யாதொன்றுமில்லை; அஞ்ச வருவதுமில்லை” என்று அடலேறு என முழங்கினார். இந்தத் தறுதண்மை-பேராண்மை சமய நெறிக்கே உரியது; அருளியலுக்கே உரியது.

ஆனால், ஐயகோ! இன்றைய சமய வரலாறு அச்சத்தின் கொள்கலனாக மாறியிருக்கிறது. பல்லவப் பேரரசனையே கலங்க வைத்த நெறியினைச் சார்ந்தவர்கள் கோட்டைக் காவலர்களைக் கண்டே கலங்குகிறார்கள். இன்று சமயம் வாழ்க்கைக்காக இல்லாமல் வயிற்றுப் பிழைப்புக்காக என்று ஆகிவிட்டது. பயனுக்காக அன்றிப் படாடோபத்துக்காக என்றாகி விட்டது. இன்றைய சமய உலகில் ஈர நெஞ்சினைக் காணோம். ஆதலால், கனிந்த அன்பினையும் காணோம். துறவு இன்மையால் தூய நெஞ்சத்தையும் காணோம். அஞ்சாமை யின்மையால் சைத்தானும் கை வரிசை காட்டுகின்றான்.

ஆதலால் எங்கு நோக்கினும் துன்பம்! பகை: இந்த இருண்ட சூழ்நிலைகளிலிருந்து நம்மை வழிகாட்டிக் காப்பாற்ற வல்ல ஆசிரியர் அப்பரடிகளேயாவார். அப்பரடிகள் மனித உலகத்தின் துன்பம் துடைக்க வந்த மாமணி! இருள் கடிந்து எழுந்த ஞாயிறு! வாழ்க்கைக்கொரு வழித்துணை! அப்பரடிகள், உபதேசங்களால் மட்டுமல்ல, அவர்தம் வாழ்க்கையாலும் நமக்கு வழி காட்டினார். மனம்,