பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/258

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
254
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
 

இயற்கையில் அமைந்திருப்பது மிகமிகச் சிறிய விழுக்காடேயாகும்.

மனித நிலையில் இன்றைக்கு அன்பு, தன்னயப்பை நிறைவேற்றிக் கொள்வதற்குரிய வாயிலாக அமைந்துள்ளதே தவிர, அது தியாகமாக இல்லை. மனித குல நாகரிகத்தின் தாயகமாக, தொட்டிலாக விளங்கும் காதல் வாழ்க்கை கூட இன்று நிர்வாணமான நயப்புகளுக்கு இரையாகிவிட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக உலகைத் தியாகத்தில் இயக்குவதற்காக அமைந்த துறவு நெறியும் கூட, இன்று நிறுவனங்களாகி வழக்கமான செய்முறைகளுக்கு இரையாக்கப்பட்டு, நெகிழ்ந்து கொடுக்காத இறுக்கமான நடைமுறையாகி விட்டது. இதனை, அப்பரடிகள் உணர்ந்து ‘அன்பலால் பொருளுமில்லை ஐயன் ஐயாறனார்க்கே' என்று ஆற்றுப் படுத்துகின்றார். அவர் இறையை, வாச மலரினும், மூரி முழங்கொலி நீரிலும் காணத் தூண்டுகிறார். வழிபாடு இயற்றும்படி வழி நடத்துகிறார். அப்பரடிகள் நடையறாப் பெருந்துறவை நாட்டுக்கு அறிமுகப்படுத்துகின்றார்.

இங்ஙனம் விளங்கிய அப்பரடிகள், தமிழக வரலாற்றின் ஒளிவிளக்கு. அப்பரடிகள் மானிட சாதியின் அடிமைத் தனத்தை வெறுத்தவர்; எதிர்த்துப் போராடியவர்; மனித உரிமைகளைக் காப்பதற்காக ஏழாம் நூற்றாண்டிலேயே முடியாட்சியை எதிர்த்துப் போராடியவர். அந்தப் போராட்டத்தின் காரணமாகப் பல்வேறு இன்னல்களை ஏற்றுக் கொண்டவர். இனவழியிலும் மொழிவழியிலும் பொதுமைக்கு இடையூறில்லாத தனித்தன்மையைப் போற்றிக் காத்தவர். 'வடமொழியும் தென் தமிழும்-ஆனவன் காண்’ என்றும், ‘ஆரியன் கண்டாய்; தமிழன் கண்டாய்’ என்றும் அருளியவர். சிறந்த ஞானியாகத் திகழ்ந்த அப்பரடிகள், உடல் உழைப்பிற்கு உரிய ஏற்றம் தந்தவர்.