பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/264

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
260
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
 

துறையில் அறக்கட்டளை முறையை-தர்மகர்த்தா முறையை வலியுறுத்துவர்.

இந்தத் தர்மகர்த்தா முறையை அண்ணல் காந்தியடிகள் இன்று இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தினார். ஆனால் இந்தத் தர்மகர்த்தாக் கொள்கையை ஏழாம் நூற்றாண்டிலேயே அப்பரடிகள் தமிழ் மக்களுக்கு அறிமுகப் படுத்தினார்.

இரப்பவர்க் கீய வைத்தார்
ஈபவர்க் கருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட் கெல்லால்
கடுநர கங்கள் வைத்தார்
பரப்புநீர்க் கங்கை தன்னைப்
படர்சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக் கருளும் வைத்தார்
ஐயன்ஐ யாற னாரே

.

(4ஆம் திருமுறை)

இது அற்புதமான தத்துவம். இரப்பவரின் துன்பம் நீக்கவே செல்வம் உடைமை. அச் செல்வம் உடைமையும் நாமாகப் பெற்றதல்ல. இறைவன் திருவருளால் அமைந்தது. அதுவும் இரப்பவர்க்கு ஈதல் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் அமைக்கப் பெற்றது. இது நியதி. இங்ஙனம் அல்லாத உடைமை அமைப்புகள் ஏற்கத்தக்கன அல்ல. அவை பிறர் பங்கைத் திருடிச் சேர்த்தவை. இவர்கள் பொருள் ஈட்டும் பொழுதும் பேணும்பொழுதும் கரந்து வாழ்பவர்கள். ஆதலால் இவர்களுக்கு நரகம் உறுதி என்கிறார் அப்பரடிகள்.

பழகும் பண்பியல் கோட்பாடு

மனிதகுலம் கூடிவாழும் இயல்பினது. கூடிவாழ்வதே ஒழுக்கம். கூடி வாழ்தலுக்குச் சில பண்பியல்கள் தேவை. இதனைப் "பழகும் பண்பியல்” என்று கூறலாம். இத்துறையை