பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/268

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
264
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
 

நிலமெனப் பாராட்டப்பெறும் தொண்டை மண்டலத்தில் அப்பரடிகள் தோன்றித் தமிழகத்தில் புரட்சி நடத்தினார். அவருடைய புரட்சி அருள் வழிப் பாய்ந்தோடிய புரட்சி. அந்தப் பக்தி வெள்ளத்தால் அடித்து ஒதுக்கப்பெற்ற குப்பைகள் ஏராளம், ஏராளம்.

ஆளும் இனம், ஆளப்படும் இனம் என்ற வேறுபாட்டை அருளியல் தலைவர் அப்பரடிகள் எதிர்க்கிறார். அவரே மக்கள் இனத்தின் விடுதலைக்கு முதன் முழக்கம் செய்தவர். “நாம் யார்க்கும் குடியல்லோம்” என்பது அவருடைய விடுதலை முழக்கம். இறைவனே உலகின் தலைவன். அவன் ஒருவனுக்கே நாங்கள் குடிமக்கள் என்பது அவர் கொள்கை. சைவக் கொள்கையின்படி ஆன்மாவிற்கு வயதில்லை, உடலுக்குத்தான் வயது. இந்த உடலைப் பல்லாண்டுகள் கருவியாகக்கொண்டும் உயிர் உய்தி பெறலாம். உடலுக்கு ஏற்படுகின்ற மரணம் அறியாமையால் வருவது, நோயால் வருவது, அல்லது கூற்றுவனின் சேட்டையால் வருவது. மரணத்தை வெல்லுதல் மனிதனின் கடமை என்பதை மார்க்கண்டேயன் வரலாறு உணர்த்துகிறது. இன்று உலகம் முழுவதும் மரணத்தை வெல்லும் முயற்சி நடைபெறுகிறது.

நம்முடைய சுதந்திர பாரத நாட்டில் நல்லாட்சியின் காரணமாக நமன் தமர் புறமுதுகிட்டு ஒடிக்கொண்டு இருக்கிறார்கள். வாழ்நாள் வளர்ந்து கொண்டிருக்கிறது. இன்று நடைபெறும் இந்தப் புரட்சியை ஏழாம் நூற்றாண்டிலே எடுத்துக் காட்டினார் அப்பரடிகள்.“நமனையஞ்சோம்” என்பது அவர்தம் வாக்கு. மேலும் அப்பரடிகள் சாதி, குலம், சமயவேறுபாடு இவற்றைக் கடந்து மனித குல ஒருமைப்பாட்டை வற்புறுத்துகிறார். வற்புறுத்துவதோடு மட்டுமின்றி, இவ்வேறுபாடுகளைத் தோற்றுவித்துக் கொண்டு அவற்றிற்காக வழக்காடுகின்றவர்களைக் கடுமையாகச் சாடவும் செய்கிறார். “சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் கோத்திரமும் குலமும் கொண்டென் செய்வீர்”. அடுத்து அறுவகைச் சமயத்தவரைத் தேற்றும் தகையன, தேறிய தொண்டரைச் செந்நெறிக் கேற்றும் தகையன என்றும்,