பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/285

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அப்பரடிகளின் காட்டிய நெறி
281
 

அதைவிடப் பெரிய கொடுமை சாதலுக்கு அஞ்சுவது. என்றோ சாதல் நாள் என்பது முடிவு செய்யப் பெற்ற ஒன்று. அதை எதிர்நோக்கி எழுச்சியுடன் கடமைகளைச் செய்து முடித்துச் சாதல் கரத்தில் தன்னை ஒப்படைக்கத் தயாராக இருப்பவனே சிறந்த மனிதன்.

ஆனால் இன்றோ, சாதற் கொடுமையினும் சாக அஞ்சும் அச்சம், மனித உலகத்தை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. சிலர் நாள்தோறும் நூறு தடவை செத்துப் பிறக்கிறார்கள். அதனால், அறிவு மழுங்குகிறது; ஆற்றல் அழிகிறது; திறன் தேய்கிறது; துன்பமே சூழ்கிறது. வாழ்நாள் முழுதும் அழுதே முடிக்கின்றனர். இதனை உணர்ந்த அப்பரடிகள் 'சாதலுக் கஞ்சாது சதுரப்பட வாழ்' என்று எடுத்து மொழிகிறார். “நமனை அஞ்சோம்” என்று எடுத்து மொழிகிறார். நரகம் இங்கும் இருக்கிறது. அங்கும் இருக்கிறது. துன்பத்தின் எல்லைக்கு நரகம் எனப் பெயர். இப்பொழுது அஃது எங்கு இருக்கிறது என்று கேட்பவர் யார்? நரகத்திலிருந்து கரையேறவும் முயற்சிக்காமலும் அதற்குள்ளேயே நொந்து இடர்ப்பட்டு மாளுதல் கூடாதென்பதனை 'நரகத்திலிடர்ப்படோம்' என்று கூறினார்.

மனிதன், வளரும் தன்னை மறந்தும் பொய்யென்று கருதக் கூடாது. அவன் உறு பொருள். அவனுக்கு அறிவுண்டு; திறனுண்டு; தொழிலுண்டு; துணைநிற்கச் சுந்தரத் தோழ னாகச் சொக்கேசன் உண்டு; இன்பமுண்டு; அவனுக்கொரு வரலாறு உண்டு என்று கருதாமல், தன்னையே பொய் யென்று கருதி, அழியக்கூடாது என்ற குறிப்பில் நடலை யல்லோம் என்று பாடுகின்றார். மேலும், திறனற்ற - பயனற்ற வண்ணம், நடைப் பிணமாக வாழ்தலையும் “நடலை” யென்றே குறிப்பிற் காணலாம்.

மனித வாழ்க்கையில் ஆர்வமும், ஆள்வினைத் திறனும், உணர்வும் சிறந்து விளங்க மனக்களிப்பு இன்றியமையாதது.