பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/286

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
282
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
 

கவலைப்படுதலும் முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு அழுதுகொண்டிருப்பதுமல்ல. இவை மேலும் துன்பத்தை வளர்க்கவே செய்யும். அதற்குப் பதிலாக நிகழ்ந்த சம்பவங்களை மறந்து மனத்தைச் சோர்வுபடாமல் தடுத்துக் களிப் பூட்டிக்கொள்ள வேண்டும். அப்பரடிகள் இந்த வாழ்க்கையினை 'ஏமாப்போம்’ என்று எடுத்துக் கூறி விளக்குகிறார்.

அடுத்து, மனித உலகத்தை வருந்துவது பிணி, உடற் பிணி இயற்கையன்று; செயற்கையேயாம். உடல் திறன் தெரிந்து நெறியோடும் முறையோடும் வாழ்ந்தால் பிணி வாராது. இன்று நம்மிற் பலருக்குக் குறை, அவர்தம் உடல் திறன் தெரியாதது. தெரிந்து தெளிந்து பேணும் ஆர்வமும் இல்லை. என்னவோ வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பிணியில்லாத வாழ்க்கையே பெருவாழ்க்கையென்பதால் 'பிணி யறியோம்' என்றார். அப்பரடிகளுக்குப் பிறந்த நாள் தொட்டுப் பிணி கிடையாது. அவர் உடலறிந்த ஒரே ஒரு பிணி சூலைப் பிணியேயாம். அந்தச் சூலையும் இயற்கைப் பிணியன்று; திருவருள் செய்த பிணி. அதனால், “அருட் பெரும் சூலை" யென்று அப்பரடிகளே குறிப்பிட்டுள்ளார்.

வாழ்க்கையில் இன்றும், என்றும் எப்பொழுதும் எவ்விடத்தும் இன்பமே யிருத்தல் வேண்டும். எந்நாளும் துன்பங்கள் கூடாது. அத்தகைய ஒர் உயரிய வாழ்க்கையை அப்பரடிகள் வையகத்திற்குக் காட்டுகின்றார். அந்த வாழ்க்கை ஏன் கிடைக்கவில்லை? அந்த வாழ்க்கை எப்பொழுது கிடைக்கும்? துன்பக் கலப்பில்லாத இன்பமே எழில் உருவமாகக் கொண்ட சங்கரனின் திருத்தாளை நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து, பொறி புலன்களெல்லாம் அத்தன்மையவாகி, அவன் தன் திருவடியை நாம் அண்ணித்து அடையும்பொழுது அவலங்கள் வாரா. இன்பமே! இன்பமே! இன்பமே! என்பது அப்பரடிகள் காட்டிய நெறி.