பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/329

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
திருநாவுக்கரசர்
325
 

உண்மை இம்மூன்றில் ஒன்றிருந்து ஒன்று குறைந்தாலும் அது மெய்ந்நெறியாகாது. சமய நூலோர் புறநெறி தவிர்த்து அருள் நெறியில் உய்த்துச் செலுத்தும் சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நெறிகளை மெய்ந்நெறி என்பர். முன்னரே குறிப்பிட்ட மெய்ம்மை, வாய்மை, உண்மை ஆகிய சீலங்களை முறையாகச் சரியை, கிரியை, யோக ஞான நெறி நின்று ஒழுகினாலேயே பெற முடியும். காரணங்களைக் காரியமாகக் காட்டுதல் தவறில்லை. விருப்பம் இச்சை மீதூர்தல். அதாவது பசித்தான் உணவின் மாட்டும், பிணியுடையார் மருந்தின் மாட்டும், இடையீடின்றி இச்சை மீதூர்தல் போலப் பழுத்த மனத்துடன் சிவபக்தியில் மேலிட்டு இறைவனிடத்து ஆற்றல் மிக்க அன்பில் - அயரா அன்பில் முறுகி நிற்றலே விருப்ப மென்ற வித்து. மெய்ம்மை உழவில் பயிற்சியின்மையின் காரணமாகத் தொடக்க நிலையில் காணப்பெற்றனவும், இடையில் உலகியலின் காரணமாகத் தோன்றியனவுமாகிய பொய்மையை அகற்றுதல் வேண்டும். மெய்ம்மை உழவில் பொய்ம்மை தவிர வேறு களை இருத்தல் இயலாது. களை அகற்றிப் பின் பொறுமை என்ற நீரைப் பாய்ச்ச வேண்டும். பொறுமை யென்பது வேறு; சகிப்புத் தன்மை என்பது வேறு. பொறுமையையே வள்ளுவம் பொறையுடைமை என்று போற்றும். அண்ணல் காந்தியடிகள் பொறையுடைமையை அகிம்சை யென்றார். தனக்கு ஏற்படும் துன்பத்தை - இழப்பை - இழிவைக் கொஞ்சமும் கூச்சமின்றி மனத்தாலும் நினைக்காது ஏற்று அனுபவித்தலே பொறையுடைமை. துன்பம் செய்யாமை மட்டும் அகிம்சையல்ல. மற்றவர் தரும் துன்பத்தையும் மகிழ்வோடு ஏற்றுத் தாங்கி அனுபவித்துத் துன்பம் தந்தாரையும் வாழ்வித்திடும் பண்பே அகிம்சை. இதனை வள்ளுவம் ‘உற்ற நோய் தோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை, அற்றே தவத்திற்கு உரு’ என்றது. பலர் ஊரை அறிந்திருப்பர்; உலகை அறிந்திருப்பர். ஆனால், அவர்களைப் பற்றி அவர்களுக்கே தெரியாது. சிறந்த சமய வாழ்க்கையின் முதற்படி தம்மை உணர்தலே. அதற்குப் பிறகுதான் தம்மை