பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

384

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



நீங்கா விரும்பினன். அப்படியிருக்கச் சுந்தரரின் காதல், கயிலாயத்தில் அனுமதிக்கப்பெறாதது ஏன்?

சிவன் உமையிடத்துக் கொண்ட காதல் கவர்ச்சிக் காதல் அல்ல; ஐந்தொழில் நிகழ்த்தும் குறிப்புடைய காதல்; உலகுய்யச் செய்யும் காதல்! சுந்தரர் காதல் அத்தகையதன்று. இன்று நிகழ்கின்ற காதல் வாழ்வு, காமவேட்கை தணிந்ததாக நிகழ்வுறின் நன்மக்கட் பேறுண்டாம்!

நம்பியாரூரர் பிறப்பு, வளர்ப்பு, திருமண வாழ்க்கை அத்தனையிலும் வருணக்கலப்பு ஏற்பட்டுள்ளமையை ஒர்க! பிறப்பு, சைவ அந்தணர் குலத்தில்; வளர்ப்பு, அரசர் குலத்தில்; திருமணங்கள், முறையே உருத்திர கணிகையர் குலம், வேளாண் குலத்தில்! இங்ஙனம் சிவபெருமான் திட்டமிட்டு வருணக் கலப்பைச் செய்து வைத்தமையால் இறைவன் திருவுள்ளம் வருணபேதமற்ற சமுதாயமே என்பது தெளிவான உண்மை.

ஆனால், இன்று சமுதாய ரீதியிலும் சரி, சமய ரீதியிலும் சரி, சாதி வேற்றுமை நெகிழ்ந்து கொடுக்கக் கூட மறுக்கிறது! சாதி முறைகள் இறுக்கமாகிக் கொண்டு வருகின்றன. இது வரலாற்று உண்மைக்கு மாறானது; பண்பாட்டுக்கு முரணானது; தீது!

தமிழ்நாட்டில் பரவிய அயல் வழக்குகள் காரணமாகத் தமிழர் வாழ்க்கையில் நிலையாமையுணர்வு ஆதிக்கம் செலுத்தியது. வாழ்க்கையையே துன்பச் சுமையாக்கி விட்டனர். மனையற வாழ்க்கை கொச்சைப்படுத்தப் பெற்றது. கடவுள் பயப்படக்கூடிய பொருளானார்! கடவுள் வாழ்த்துப் பொருளாகவே விளங்கினார்.

இத்தகு வாழ்க்கை முறை நன்றன்று என்று தமிழ் மக்களுக்கு உணர்த்தி வாழ்வாங்கு வாழும் நெறியில் ஆற்றுப் படுத்தவே சுந்தரர் வரலாற்றைத் திருவருள் முன்னின்று இயக்கியதாகும்.