பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தரர்

383



திருக்கயிலையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்குச் செந்தமிழில் இயற்றிய ஞான உலா பரிசு. சிவ பெருமான் ஞான உலாவைக் கேட்டருளினன். கயிலையில் பேசப்படும் மொழி எது? அம்மையப்பனுக்கு மொழி ஏது?

உண்மையில் கடவுளுக்கு நாடு, மொழி, இனம், மதம் இவற்றிற்கும் இணைப்புண்டாக்கி வேறுபாடு தோன்றப் பேசுவது தவறு. எல்லைகளைக் கடந்ததே கடவுள். கடவுளுக்கு நாடும் இல்லை; மொழியும் இல்லை; இனமும் இல்லை; மதமும் இல்லை.

ஆயினும் வாழும் மாந்தருக்கு நாடு, மொழி, இனம், மதம் இவையெல்லாம் உள்ளனவே. இந்த அடிப்படையில் ஆய்வு செய்தால் கயிலையின் மொழி தமிழேயாதல் வேண்டும். அல்லது கயிலைநாதனுக்குத் தமிழ் தெரியும் என்று அறியவேண்டும்.

சேரமான் பெருமானின் ஞான உலா அரங்கேறியது கயிலையில்! கயிலை வாசி அம்மையப்பன். அம்மை, திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் கொடுத்தருளிய பின், திருஞான்சம்பந்தர் பாடிய மொழி “தோடுடைய செவியன்” என்ற தமிழ்தானே!

ஆதலால், சிவநெறி மரபுப்படி தமிழில் இறைவனை வழிபடலாம்; தமிழன் வழிபடலாம் என்பதே உண்மை. தமிழில் பாடிய சேரமான் பெருமானும் தம்பிரான் தோழரும் கயிலையில் பணிபுரியும் பேரின்ப வாழ்வில் திளைத்து மகிழ்ந்திருந்தனர்.

சுந்தரர் நெறி

சுந்தரர் வரலாற்றில் படிப்பினைகள் பல உண்டு. ஆய்வு செய்ய வேண்டியனவும் உண்டு. கயிலாயத்துறை இறைவன் சிவன், உமையொருபாகம் கொண்டவன்; உமையின் மீது