பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


யாருக்குக் கவலையே இருக்காது. அவர்கள் ஏதாவது செய்தாலும் காம விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ளச் செய்வார்களே தவிர, பலருக்குப் பயன்படச் செய்யார். ஏன்? இந்த அசுர காமம் ஒருவனை இடமாகக் கொண்டு முதலில் இயங்கினாலும் பின்னே வளர்ந்து அவனையே மடக்கி - அவனை அணு அணுவாக அழித்தொழிக்கும். ஐயகோ! இத்தகைய காம உணர்வு மனித உலகத்தை அரித்து உருக்குலைக்கும் என்புருக்கி நோயாகும். வீட்டில் காதலித்து இன்புற்று வாழ்க! இது காமமன்று; அறம்! திருமடங்களில் துறவிருந்து உடைய பொருளைப் பேணி அறஞ் செய்க! அஃது அறம். ஆனால், செல்வச்செருக்கு, தன் முனைப்பு, மக்கட்பணி மறத்தல் காமத்தின் சின்னங்கள். துவராடையே துறவாகாது. நெஞ்சிற் சந்து பொந்துகளிலுங்கூட சம்பிரதாயமென்ற பெயரில் ‘நான்’, ‘எனது’ என்ற செருக்கு ஒட்டியிருக்கக் கூடாது. இத்தகு துறவு தூய உலகத்தை வழி நடத்தும் அறம். கடவுளுக்கு அருச்சனை செய்க! அவன் திருவடியைக் காதலித்து அருச்சனை செய்க! ‘அது வேண்டும் இது வேண்டும்’ என்று அருச்சனை செய்வது காமம். ‘நாதன்தாள் வாழ்க’ என்று அருச்சித்தல் காதல், பக்தி.

மனித வாழ்க்கையின் மையம் மனமே! அவன் வீழ்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் மனமே காரணம். மனத் தூய்மையே அனைத்து அறங்களுக்கும் அடிப்படை நெற்றி நிறைய நீறு தாங்கினால் போதுமா? பூசும் நீறுபோல் உள்ளும் புனிதமிருக்கவேண்டும். மனத் தூய்மை எளிதில் கிடைப்பதன்று. மனத்துய்மை இல்லாதார் தன் முனைப்பில் ஈடுபடுவர்; உயர்வு மனப்பான்மை கொள்வர். கூடிப் பழகுதலில் கூச்சங் காட்டுவர். ஆணவப் போக்கு ஆட்சி செய்யும். எப்பொழுதும் ஒருவழிப் பயணமே செய்வர். எதையும் எளிதில் மறவார். இத்தகு கேடுகள் மனத் தூய்மையின்மையின் சின்னங்கள். பத்திமை வளர வேண்டிய இடம்