பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



17
நீதியால் தொழுக

மனிதனது தேவைக்கேற்ப வருமானம் வந்து கொண்டிருந்தால் அவன் நேர்மைத் திறமுடையவனாக, ஒழுக்க சீலனாக, அறத்தின் வழிச்செல்பவனாகத் திகழ்கிறான். தேவையை நிறைவு செய்ய முடியவில்லையானால் திசைமாறித் திரும்புகிறான். தேவைப் பூர்த்திக்காக, சிந்தனை ஓட்டத்திலும் மாற்றம் ஏற்படுகின்றது. அவன் சிந்திப்ப தெல்லாம் ‘தேவை நிறைவு’ பற்றித்தான். அவ்வாறு முனையும் போது, அவனுக்கு முன்னாலே தோன்றும் நீதி, நேர்மை, ஒழுக்கம் முதலியவற்றைப் புறக்கணிக்க முயலுகிறான்.

இங்குதான் சமயம் மனிதனைத் திருத்தி நல்லாற்றுப் படுத்துகின்றது. ‘சின்ன தேவைக்காக உலகின் நிலை பேறான ஒழுக்க நெறியை விட்டு வழுவாதே’ என்று நல்லுரை பகருகின்றது சமயம். மனிதனது மனத்திலே தோன்றும் தீய எண்ணங்கள், தாறுமாறான சிந்தனைகள் இவைகளுக்குத் தடை போடுகிறது சமயம். சமயச் சார்பற்ற ஒழுக்க நெறி, ஊற்றுக் கசிவில்லாத ஓடை போன்றதாகும்; மணற் பரப்பின் மீது கட்டப்பட்ட மனை போன்றதாகும்; வேரில்லாத மரம் போன்றதாகும். மனிதனை மனிதன் வஞ்சித்து ஏமாற்றி வாழ்கின்ற காலத்தில் சிந்தனையைத் திருத்துகிறது சமயம்.