பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நீதியால் தொழுக
77
 

சிந்தனை செயலாக வந்த பின்னர், செயலைத் திருத்த முற்படுகிறது அரசியல். குற்றங்கள் நிகழ்ந்த பின்னர் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவர்களுக்குத் தண்டனை வழங்குகிறது சட்டம். இந்தக் குற்றத்திற்கு அடிப்படையாக இருக்கும் எண்ணத்தையே-சிந்தனையையே திருப்பி நல்வழிப் படுத்துகிறது சமயம்.

வாழ்க்கை எப்பொழுதுமே குறைவுடையதுதான். சில இடங்களில் இதற்கு மாறாகத் தோற்றமளிக்கலாம். ஆனால் எல்லாருக்கும், எவ்வகையிலேனும் குறைவு இருந்து கொண்டேதான் இருக்கும். நிறைவான பொருள் எது என்பதைக் துருவித்துருவி ஆராய்கின்ற பொழுது ஆதியும் அந்தமுமற்ற இறைவன் ஒருவன்தான் என்ற முடிவு ஏற்படுகிறது. இறைவன் குறைவற்றவனாக அன்பே உருவாக இன்பமே வடிவினனாக இருக்கின்றான். இத்தகு பொருளை மனிதன் சார்ந்திருப்பதனால் சான்றாண்மை மிக்கவனாக மாறிவிடுகின்றான். இறைவனைச் சார்வதற்குச் சமயமும் வழிபாடும் உறுதுணையானவை.

இறைவனைத் தொழுதல் ஓர் அறிவியல் முயற்சி. அறியாமையில் அல்லலுறும் உயிர் ஞானத் திரளோனாக நிற்கும் இறைவனைத் தொழுதல் மூலம், அறியாமை நீங்கப் பெறுகிறது; உயிர் ஞானம் பெறுகிறது. துன்பத் தொடக்கில் தொல்லையுறும் உயிர், துன்பத் தொடக்கிலிருந்து விடுதலை பெற்று, இன்பத்தில் திளைத்து மகிழ்கிறது. இறைவனைத் தொழுதல் இறைவனுக்காக அல்ல. அவன் பெறக்கூடியது ஒன்றுமில்லை. இறைவனைத் தொழுதல் உயிரின் வளர்ச்சிக்கே யாம். இறைவனைத் தொழுதல் என்றால் உடனடியாகச் சடங்குகளே நினைவுக்கு வரும். சடங்குகள் சமயமாகா; இறைவனைத் தொழுதல் ஆகா. ஆனால் அவையின்றியும் சமய வாழ்வு வாராது; கடவுளைத் தொழுதலும் ஆகாது. சடங்குகள் சமயவாழ்க்கைப் பயிற்சிக்குத் தொடக்க நிலையில் துணை செய்வன; வழிபாட்டுணர்வில் நிலைத்து