பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/98

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
22
வீடு பெறும் வழி

பிறவி, நோக்கமுடையதே - உயர் நோக்கமுடையதே. அதாவது, துன்பம் நீக்க வருவது பிறவி. இன்பம் தரவல்லது பிறவி. இல்லை; துன்பம் காரியம், துன்பத்துக்குக் காரணம் அறியாமை. காரணம் செழுமையுற்றாலே காரியம் கைகூடும். அறியாமை அகலவேண்டும். அறிவு பெருகி வளர வேண்டும். இந்த அறிவு ஐயத்தின் நீங்கியதாக இருக்க வேண்டும். ஐயத்தின் வழிபட்ட அறிவு, சொல் வழக்கால் அது அறிவு என்று சொல்லப்பட்டாலும், தன்மையால் அது தரும் பயனால் அது அறியாமையேயாகும். சிறந்த அறிவு சிற்றெல்லைக்குட் பட்டதன்று. எந்த ஒரு அறிவும் சிற்றெல்லைக்குள் பயிலும் வரையில் அது குறையுடைய அறிவே. எந்த ஒரு குறையும் அடுத்து முயன்றாலும் குறை நிலையிலேயே நிறைவைப் பெறமுடியாது. குறையறிவு, குறைவிலா நிறையறிவாய் இருக்கின்ற பரசிவத்துடன் உணர்வு நிலையில் உறவு பெற்று நிறைவு பெற்று, அந்த நிறைவைத் தனக்கு உரிமையாக்கிக் கொள்ளும் பொழுதே, முற்றாக அறியாமை அகல்கிறது: துன்பம் அகல்கிறது. இந்த நிலையிலேயே அறிவு, ஞானம் என்று பெயர் பெறுகிறது. துன்பத் தொடக்கிலிருந்து முற்றாக