பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன்

97


பாட்டில் இருக்கிறது. ஆன்மா, ஞான ஒளியைப் பெற்றிருக்கிறது! இதனால் இன்பம் மேவுகிறது. சாதாரண இன்பமன்று அந்தம் ஒன்றில்லாத இன்பம்! ஆனந்தமாய இன்பம்! இடையீடில்லாத இன்பம்!

ஆன்மா ஆனந்தமயமான இன்பத்தின் அருமை தெரியாமல் அதனை இழந்துவிடலாம். அல்லவா? ஆன்மாவை ஆதியில் பற்றிய அறியாமை எதைத்தான் செய்யாது? இந்த உலக வரலாற்றின் பக்கங்களை நிரப்பியிருப்பது அறியாமையின் நிகழ்வுகளே! ஏன்? அறியாமையே கூட அத்தாணி மண்டபமேறி அரசோச்சியிருக்கிறது! ஐயோ பாவம் அறிவு- ஒடுங்கி இருந்த காலமும் உண்டு. அறிவு பெற்ற ஒரே காரணத்தால் ஒறுக்கப்பட்டதும் உண்டு. அறியாமையால் ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பத்தைத் துறந்து, மண்ணின் மேல் ‘நான்’ ‘எனது’ என்றும் மாயை கடித்த வாயிலேயே நின்று நடித்திட ஆன்மா விரும்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அறியாமையின் கொடுமை எழுதும் தரத்தன்று. ஆன்மாவுக்கு அறியாமை கொடுத்துள்ள வினை குறைவா, என்ன? ஆதலால், சிவமாகிய சக்தி, ஆன்மாவைப் பின்தொடர்கிறது. ஆன்மா, செல்லுமிடமெல்லாம் ஆன்மாவின் பின்னே சிவமாகிய சக்தி தொடர்கிறது! ஏன்? ஆன்மா ஆனந்தமாகிய இன்பத்தை இழந்துவிடாமல் அனுபவிக்குமாறு செய்வது சிவசக்தியின் குறிக்கோள்!

வழிபாட்டுக்குரிய சிவசக்தி, புறம் புறம் திரிவானேன்? முன்பே போகக் கூடாதா? அது மரபு; மதிப்பு; மரியாதை! ஆனாலும் முழுதும் கடமையின் வழிப்பட்ட தாகாது. முன்னே போனால் வழிகாட்டலாம்; தவறில்லை. வழி தவறிப் போகாமல் நெறிவழிச் செலுத்திக் காப்பாற்றலாமே என்று வாதிடலாம். இதில் உண்மை இருக்கிறது; மறுப்பில்லை. ஆனால், கீழே விழுந்தால் உடன் தூக்க இயலாது. பின்னே வந்தால் இடறியவுடனே காக்கலாம்; வழியும் காட்ட