பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அணிந்துரை
சித்தாந்த சரபம்
ஞானத் தமிழாகரர், டாக்டர் வை. இரத்தினசபாபதி,
ஆசிரியர் ‘சித்தாந்தம்’

தமிழ் மாமுனிவர், அருள்நெறித் தந்தை, தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் பன்னோக்குச் சமுதாயச் சிந்தனைகளின் எழுத்துருவங்களைத் தொகுத்து நூல் வடிவாக்கித் தமிழ்ச் சமுதாயத்துக்கு அளிக்க முன்வந்திருக்கும் பதிப்புச்செம்மல். தமிழவேள், மெய்யப்பனார் அவர்களின் தொண்டு பாராட்டுதற் குரியது; காலத்துக்கேற்ற தமிழ்ச் சமுதாயக் களப்பணியும் ஆகும்.

அடிகளாரின் நோக்கில் ஒருவகையான வட்ட உத்தி அமைந்திருக்கும்.

தமிழ்ச் சமுதாயத்தின் வழியாக உலகச் சமுதாயத்தை நோக்குவதும் உலகச் சமுதாய நோக்கிலிருந்து தான் வாழும் தம்மையும் தம் உடனுறை உயிர்ப் பொருள்களையும் உயிரல் பொருள்களையும் இணைத்த நிலையில் தம்மைப் புரந்து வரும் தமிழ்ச் சமுதாயத்தை நோக்குவதும் ஆகிய வட்டம் அமைந்திருக்கும்.

தமிழக அருளாளர்களின் கொள்கையை அருளனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு உலக அருளாளர்களின் கொள்கையை-அவர்தம் அருளனுபவத்தைப் பார்ப்பதோடு நின்று விடமாட்டார். உலக அருளாளர்களின் அனுபவத்தையும் அவர்தம் செயற்பாட்டுறுதியையும் தமிழக அருளாளர்களின் கொள்கை-அனுபவம் ஆகியவற்றோடு இணைத்து ஒரு வட்டமமைத்துப் பார்க்கும்-பார்த்த திறன் அவர்தம் அணுகுமுறை.

தமிழ்ச் சமுதாயம்-தமிழ்க் கொள்கை, இன்னும் சொல்லப்போனால் தமிழ் ஆகியவைகளின் அடிப்படையில் நின்று அவர்தம் சிந்தனையானது - நோக்கானது உலகச் சமுதாயம் ஆகியவற்றைக் காணும்போது அவர்தம் கண்கள் மலரும். உலகச் சமுதாய நோக்கிலிருந்து தமிழ்ச் சமுதாய அமைப்பைக் காணும்போது அவர்தம் கண்களில் நீர் மல்கும்.

அடிகள் தனிமையாக அமர்ந்திருக்கும் போதும், தளர்நடை சார்ந்த உலாவலின் போதும் இத்தகைய வட்ட உத்தி நிகழ்வதைக் கூர்ந்து கவனித்தால் கொள்ளலாகும்.