பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கல்லைப் பிசைந்து கனியாக்கும் தன்மையவை. மாணிக்கவாசகரின் உடலில்- இதயத்தில் பெருமான் எழுந்தருளினார். “என்றன் உடலிடன் கொண்டாய் நான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே!” என்று அருளியிருப்பது உணர்க.

பிறவி துன்பமா? இன்பமா? பிறவி துன்பமாவதும் இன்பமாவதும் பிறவியைப் பயன்படுத்துவாரைப் பொருத்தது. பொதுவாக மனிதன், வாழ்வாங்கு வாழ்ந்தால் பிறவியை இன்பமாக்கலாம்; இன்பமாக அனுபவிக்கலாம். அதனாலன்றோ “மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே” என்றார் அப்பரடிகள். “என்னை நன்றாக இறைவன் படைத்தனன். தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே!” என்றருளினார் திருமூலர். ஆனால், இன்பம் விழைவதும் இடும்பையை ஏற்க ஒருப்படாமையும் வாழ்வியல் அல்ல. நன்றும் தீதும் ஒப்பக் கருதும் பாங்குதான் வாழ்வின் சிறப்பு. இத்தகு வாழ்வில் இன்பம் அமையும்; பிறவி இன்பமாகக் கழியும். ஆனால், அந்த இன்பத்தில் மூழ்கிப் போகாமல் வாழ்ந்தால் பிறவி துன்பமாகாது; பிறவி சுமையாகவும் இருக்காது. ஆனால் எத்தனை பேர் இங்ஙனம் வாழ்பவர்கள்? கோடியில் ஒருவர்கட இல்லை. ‘நான்’, ‘எனது’ என்ற செருக்கற்ற நிலை வாய்த்து வாழ்வோரைக் காண இயலவில்லை.

இன்று செருக்குடையோரே மிகுதி. தஞ்சாவூர்ப் பொம்மையைப் போல ஆட்டம் போடுகின்றனர்; பாழ்படுத்துகின்றனர். “பாழ்த்த பிறவி” என்றார் மாணிக்கவாசகர். காரணங்கள் சீராக அமையின் காரியங்களும் சீராக அமையும். இன்று பலர் காரணங்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. காரணமின்றியே வெறுக்கின்றனர்; பகை வளர்க்கின்றனர். உழாத நிலத்தில் களை மண்டுதல் போல அன்பால் உழாத நெஞ்சுடையராதலால் தீமையே நினைக்கின்றனர், தீமையே செய்கின்றனர். தம்முடைய செயல்கள் துன்பமாக விளையும்; பிறவியைத் துன்பமாக்கும்