பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசக உவமைகள்

225


தோற்றுவிக்கும். ஆதலால், உயிர் மீண்டும் பசிக்காத அனுபவிப்பதால் மேலும் மேலும் இன்பப் பெருக்கினைத் தருகின்ற இறைவனின் திருவருளையே உணவாக ஏற்று உண்டு தேக்கெறிந்து வாழ்தல் வேண்டும். இந்த வேட்கை மாணிக்கவாசகளின் பெருவிருப்பம். மாணிக்கவாசகப் பெருமான் உடல் தாங்கி உல்வினாலும், உடம்பு நீங்கி விடுதலை பெறுதலையே விரும்பினார். அவரது விருப்பம் கை கூடுவதற்குரிய காலத்தை அவர் எதிர்பார்த்துக் காத்திருந்தார். இடைவெளியில் அமைச்சு அதிகாரம் பரிகள் வாங்குதல் ஆகிய பல்வேறு கவர்ச்சிகளுக்குரிய பேறுகள் கிடைத்தும் மாணிக்கவாசகர் அவற்றில் நின்று நிலைத்து அனுபவிக்கவில்லை. சமய வாழ்க்கையின் சிறந்த நோக்கம் இம்மையும் மறுமையும் ஒருங்கே நலம் பெறுதலேயாகும். மாணிக்கவாசகர் இம்மை நலன்களை தம்மைத் தேடி வந்தவற்றைத் துச்சமென உதறித் தள்ளினார். “பொன் வேண்டேன்; புகழ் வேண்டேன்; பொருள் வேண்டேன்” என்று பாடுகின்றார்.

கொக்கின் நிறம்போல மாணிக்கவாசகர் அகத்தாலும் புறத்தாலும் தூயவர்-கொக்கு உட்கார்ந்திருக்கும் ஆற்றில் புனலும், போகத்துக்குரிய மீன்களும் ஓடுதல்போல, மாணிக்கவாசகர் அமர்ந்திருந்த அரசவை வாழ்க்கையில் பொருள்களும் போகமும் புரண்டன. கொக்கு, ஓடிய எல்லா மீன்களையும் பிடிக்காதது போல அவர், தமக்குக் கைக்கு எட்டினவாக இருந்த எந்தப் பொருள்களையும் போகங்களையும் விரும்பினாரில்லை. கொக்கிற்குத் தனக்குத் தேவையானதும் போதுமானதுமான மீன் என்று தேர்ந்தெடுக்கும் அறிவு இருப்பதால் ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடிக் காத்திருக்கிறது. மாணிக்கவாசகரும் ஞானம் கைவரப் பெற்ற வரானமையால் நிலையில்லாதவற்றைத் தெளிவுற உணர்ந்து நிலையான திருவருட் பேற்றை விரும்பி நிற்கிறார். நாம் விரும்புவதொன்று விரும்பியவுடன் கிடைத்துவிடுவதில்லை.