பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசக உவமைகள்

231


நிறையக் குடிக்க வேண்டும் என்ற ஆசை- தேவையும் கூட. கடலிலும் தண்ணீர் நிறைந்து கிடக்கின்றது எனினும் அது நக்கியே குடிக்கின்றது. அது போலவே சிலர் நல்ல இடத்தில் இருப்பார்கள்-அவர்களுக்குத் தேவையும் ஆசையும்கூட நிறைய இருக்கும். எனினும், அற்பத்தனமாகவே பிழைப்பு நடத்துவார்கள்.

இறைவனுடைய திருவருளால் இந்த உலகம் இயங்குகின்றது. அவனுடைய திருவருள் வைப்பின் காரணமாக எத்தனையோ கோடி இன்பங்கள் இந்த உலக அரங்கில் நிரம்பிக் கிடக்கின்றன. எனினும், மனிதர்கள் உழைத்து இன்பத்தைப் பெற முயற்சிப்பதில்லை. அற்பமாகவே நடந்து கொள்ளுகிறார்கள். இறைவனையும் எண்ணிப் பார்ப்பதில்லை. நாய் கடல் நீரை நக்கிக் குடிப்பது போலவே, மனிதர்களில், பலரும் திருவருளின்பம் மலிந்து கிடக்கும் இந்த உலகியலில் நக்கி வாழும் சிறுமையைச் செய்கிறார்கள் என்று கூறுகின்றார் மாணிக்கவாசகர்.

கடலில் நாய் நக்கிக் குடித்தல் இயற்கை. அது மாற்ற முடியாத ஒன்று. ஆனால், மனிதனின் இயற்கை பெருந்தன்மைக்குரியது. மனிதனின் வாழ்க்கையில் சிறுமை இருப்பது இயற்கைக்கு முரண்பட்டது. செயற்கையும் கூட என்ற குறிப்பையும் அவர் உணர்த்துகின்றார்.

நாய்க்கோ நீர் வேட்கை-வேட்கையைத் தணித்துக் கொள்ள அது கடற்கரையினருகிலுள்ள சிறிய தெண்ணீரூற்றுக்களுக்குப் போகாமல் ஆசை மிகுதியால் நிறை நீர்ப்பரப்புள்ள கடலையே நோக்கி வந்திருக்கிறது. கடல் நீரோ உப்பு நீர். நக்கித்தான் பார்க்க முடிந்ததே தவிர குடிக்க முடியவில்லை. வேட்கையைத் தணித்துக் கொள்ள முடியவில்லை. அதுபோல மனிதர்கள் பேராசையின் காரணமாக-அற்பத்தனங்களின் சின்னமாக தீமைக் கடல்களையே