பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசக உவமைகள்

237



எறும்பிடை நாங்கூழ் பட்டு அரிக்கப்படுதலினும் உயிர் புலன்களால் அரிக்கப்பெறுதல் வேதனைக்குரியது என்று மாணிக்கவாசகர் கண்டார். ‘எறும்பு இடை நாங்கூழ்’ என்று குறிப்பிட்டதால், நாங்கூழ் எறும்புகளால் சூழப்பெற்று விட்டன-நாங்கூழால் தப்ப முடியவில்லை என்று பொருள் பெறப்படுகிறது உயிர்கள் புலன்களால் சூழப்படுவதில்லை. சூழ முடியாது; புலன்களினும் ஆற்றல்மிக்க-புழுவுக்கில்லாத அறிவு மனித உயிர்களுக்கு இருக்கிறது. இருந்தும், பயன்படுத்தாமையால் எலும்பற்ற புழு எறும்புகளிடையே சிக்கியது போல, உயிர் புலன்களிடையே சிக்கிக் கொள்ளுகிறது என்ற குறிப்பை உணர்த்துகின்றார்.

நிலத்தை உழுது பயன்காணும் உழவன் நாங்கூழ் புழு தன் நிலத்தில் நெளிவதை விரும்புவான். அதற்குப் பகையாகிய எறும்பை விலக்குவான். அதுபோல, மனித உயிர்களைப் பாதுகாத்துப் பயன்பெறுதல், ஞான உழவு செய்கின்ற ஞான ஏருழவனாக இருக்கின்ற இறைவன் உயிர்களைப் பாதுகாத்துப் பயன்கொள்ளக் கடமைப்பட்டவன். மனித உயிர்களுக்குப் பகையாகிய புலன் அரிப்பைத் தடுத்துப் பாதுகாக்க வேண்டியவன் அவன். புலன் வாழ்க்கை வேறு; புலன் அரிப்பு வேறு. சமய வாழ்க்கை புலன் வாழ்க்கையை மறுக்கவில்லை; புலன் அரிப்பையே மறுக்கிறது. அதனாலேயே ‘அரித்தல்’ என்ற சொல் வழக்கைக் கையாளுகிறார் மாணிக்கவாசகர்.

நாங்கூழ் புழு எறும்புகளிடையே அகப்பட்டால் அரித்துத் தின்னப்பெறும்; பயன்படும் புழுவாயினும் அழிக்கப்பெறும். மனித உயிர் அன்பு, அறிவு என்ற எலும்புகளைப் பெறாவிடின் புலன்களால் அரிக்கப்பெறும். எறும்புகளின் அரிப்பிலிருந்து நாங்கூழ் புழுவை விவசாயிகள் காப்பாற்றிப் பயன் அடைவது போல, இறைவன் உயிர்களைப் புலன்களின் அரிப்பிலிருந்து பாதுகாத்து பயன்