பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசக உவமைகள்

245



ஊர் ஆவும் குருட்டாவும்

மாலைநேரம். மேயச் சென்றிருந்த பசுக்கள் வயிறார மேய்ந்துவிட்டு வீடுகளை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன. தூரத்தில் தன்னுடைய கன்றுகளைப் பார்த்தவுடன் கனைக்கின்றன. இப்பசுக்களுடன் வந்த ஒரு குருட்டுப் பசுவும் கனைத்தது. மற்ற பசுக்கள் கன்றைப் பார்த்து உறவு மேலிட்ட உணர்ச்சியால் கத்தின. குருட்டுப் பசுவோ, கன்றைப் பார்க்காமல் உறவு உணர்வு இல்லாமல் மற்றவை கத்துவதனால் கத்தியது என்ற இந்த எடுத்துக்காட்டை மாணிக்கவாசகர் பொய்யடியார் வாழ்க்கைக்கு எடுத்துக் காட்டுகிறார். இறைவன்மீது தணியாத காதல் கொண்டு ஒன்றாகி, உடனாகி இருந்து உள்உள்கி நினைந்து அனுபவிப்பவர்கள் மெய்யடியார்கள். அதன் காரணமாக, அவர்கள் இறைவனுடைய திருவருள் இன்பத்தைப் பெறுகிறார்கள். பொய்யடியார்களோ இறைவனை நினைந்து காதலாகிக் கசிந்து அழுவதில்லை; அழ நினைப்பதுமில்லை. ஆனாலும் மெய்யடியார்கள் பெற்றனுபவிக்கும் இன்பத்தைப் பெற விரும்புகின்றார்கள். விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள முழுதும் முயற்சி செய்வதில்லை. அடியார்கள் இறைவனுடைய நாமத்தைச் சொல்லுவதைப் பார்த்து இவர்களும் சொல்லுகிறார்கள். ஆனாலும், மெய்யடியார்கள் நினைந்து நினைந்து நெக்கு நெக்குருகி உளங் கலந்து ஓதுதல் போல், இவர்கள் ஓதவில்லை. உதற்றால் ஓதுகிறார்கள். ஒலிக்குறிப்புத் தோன்றுகிறதே தவிர உள்ளுணர்வு தோன்றவில்லை. இறைவனுடைய திருவருளின்பம் உள்ளத்தால் அனுபவிக்கக் கூடிய ஒன்று. அஃது எப்படி வெறும் போலித்தனமான பொறிகளின் இயக்கத்திற்குக் கிடைக்கும்? பொறிகள், ஒன்றின் குறையினை இன்னொன்று நிரப்பமுடியும். ஆனால் உள்ளம் அப்படியல்ல-இதே கருத்தினை,