பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

342

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


போற்றியெல் லாவுயிர்க்கு மீறா மிணையடிகள்
போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்
போற்றியா முய்யவாட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியா மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்.

20

மார்கழித் திங்கள்-பாவை நோன்பு நிறைவுறும் நன்னாள்! இருள் மயக்கில் கிடந்த உயிர்கள், அறிவு புலரப் பெற்றுப் பொலிவெய்தின; துய்ப்பனவும் உய்ப்பனவும் பெற்றுத் துய்த்தன; இனிதே வளர்ந்தன; அன்னையின் கருணையினால் திருவருள் நினைப்பினைப் பெற்றன; எம்பெருமானை உள்ளத்திலே எழுந்தருளச் செய்து, கொண்டன; அந்த உயிர்கள் முத்திநிலை எய்தி, மோனநிலை எய்திப் பாடிடும் அருமையான பாடல் இது. இறைவனை அண்மித்து நிற்பவர்கள் திருவடிகளையே காண்பர்; பாடுவர், இறைக்காட்சியில் வண்ணக்காட்சி, நெடுந்தொலைவுக் காட்சி! வடிவக்காட்சி, செம்மைக்காட்சி! திருவடிக்காட்சி, அண்மைக்காட்சி!

“வண்ணந்தான் அதுகாட்டி வடிவு காட்டி
மலர்க்கழல்கள் அவைகாட்டி”

என்பார் நமது பெருமான். திருநாவுக்கரசர் பாடிய திருவடித் தாண்டகங்கள் ஊனுயிர் உருக்குந் தன்மையன. மூத்த நிலையில் நின்று திருக்குறள் தந்த திருவள்ளுவனாரும் திருவடிகளைப் பற்றியே பேசினார்.

இத் திருப்பாட்டில் முத்திநிலை எய்திய மகளிர், இறைவன் திருவடிகளையே எல்லாமாக வியந்து பாடுகின்றனர். கன்னி மகளிர், மார்கழி நீராடி ஒன்று சேர்ந்து இறைவன் திருவடிகளைப் போற்றித் துதிக்கின்றனர். “காப்பாற்றும் பெருமானே! எப்பொருட்கும் முதலாயுள்ள திருவடிகளைக் கொடுத்தருள்க! எல்லாவற்றிருக்கும் ஈறாக உள்ள தளிரனைய திருவடிகளைக் கொடுத்தருள்க! உயிர்க் குலத்தின் தோற்றத்திற்குக் காரணமாகவுள்ள திருவடிகளுக்கு