பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

348

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கதிரவன் துணை செய்கிறான். கண்ணுக்குக் காணும் பொருளைக் காண உதவி செய்கிறான். பழுதைப் பாம்பைப் பிரித்துக் காட்டுகிறான். மேடு-பள்ளத்தைக் காட்டுகிறான். கண்ணுதற்பெருமான் கருணை ஒளி அகத்தே எழுதல் மூலம் ஞான ஒளி பரவுகிறது. ஆன்மாவின் அறிவுக் கண்ணுக்கு அந்த ஞான ஒளி, காட்டும் கண்ணாக விளங்குகிறது. நன்மை-தீமை, புண்ணியம்-பாவம் ஆகியவற்றைக் காட்டுகிறது. அதனால், ஆன்மாவின் அகக்கருவிகளும் புறக்கருவிகளும் ஞானேத்திரியங்களும், கன்மேந்திரியங்களும் செல்லுழிச்சென்று சிந்தனையில் வளர்ந்து, அழிவிலின்பத்தை அடைய முடிகிறது. கதிரவன் எழுச்சியால் கமலங்கள் மலர்கின்றன. கண்ணுதற்பெருமான் எழுச்சியால் உயிர்களின் இதயங்கள் மலர்கின்றன.

அறியாமை நீங்கி, அறிவு தலைப்பட்டு ஞானத்திற் பயின்று, செய்வன செய்து, இன்ப அன்பில் தலைப்படுதலே பிறப்பின் குறிக்கோள்! இப்பேற்றினை அளிக்க வரும் கடவுள் வந்து வழங்குகின்றான் ஆனந்த மலையைக் காணத் தயக்கம் ஏன்? அலைகடல் ஒலி கேட்கத் தயக்கம் ஏன்? அவன் பள்ளியெழுந்தருளிவிட்டான் அயர்ச்சியில் கிடக்கும் நாம் எழுந்து ஏத்துவோமாக!

கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுக ளியம்பின வியம்பின சங்கம்
ஓவின தாரகை யொளியொளி யுதயத்
தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
யாவரு மறிவரி யாயெமக் கெளியாய்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே.

3

மாணிக்கவாசகர் திருவடிக் காட்சிக்கு வேண்டி நிற்கின்றார்.