பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை - திருப்பள்ளி யெழுச்சி விளக்கம்

353


ஆதலால், இறைவனை இனிய அன்பில் ஏத்தித் தொழுமின்! அவன் அருளோடு ஆட்கொள்வான்!

பூதங்கள் தோறுநின் றாயெனி னல்லாற்
போக்கிலன் வரவில னென நினைப் புலவோர்
கீதங்கள் பாடுத லாடுத லல்லாற்
கேட்டறி யோமுனைக் கண்டறி வாரைச்
சீதங்கொள் வயற்றிருப் பெருந்துறை மன்னா
சிந்தனைக் கும்மரி யாயெங்கள் முன்வந்
தேதங்க ளறுத்தெம்மை யாண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே.

5

இன்று பாடிய திருப்பள்ளியெழுச்சித் திருப்பாடலில் “இறைவன் காண்டற்கரியவன்; ஆயினும் துன்பங்களைத் தொலைத்து அருள்பாவிப்பவன்” என்று கூறி, நம்மை ஆற்றுப் படுத்துகின்றார் மாணிக்கவாசகர்.

“திருப்பெருந்துறை அரசே! சிந்திப்பதற்கும் அரியவனே! இங்குத் திருமேனி தாங்கி எழுந்து வந்தருளித் துன்பங்களை நீக்கி அருளின்பம் வழங்கும் பெருமானே! “நீ, ஐம்பூதங்களிலும் ஒன்றிக் கலந்திருக்கிறாய்!” என்று ஞானிகள் பாடுகின்றனர்; ஆடுகின்றனர். அங்ஙனமின்றி நின்னைக் கண்டவர்களைக் கேட்டிலோம். நின்னை அறிந்தவர்களைக் கேட்டிலோம். எம்பெருமானே! பள்ளியெழுந்தருள்க!

“திருப்பெருந்துறையில் பெருமான் எழுந்தருளியிருந்தும், அவன் சிந்தித்ததற்கு அரியவனாகவே இருக்கின்றான். ஏன்? அறியாமையில் மூழ்கிக்கிடப்போர்-ஆணவ வெறியில் தலை தடுமாறுவோர் சிந்திக்கமுடியாது.

“கேட்டறியோம் உனைக் கண்டறிவாரை” என்பதில் ஒரு தர்க்கம் இருக்கிறது. காண்டல் முந்தியா? அறிதல் முந்தியா? தூரத்துப் பொருள்களை அறிந்த பிறகே, காணும் ஆர்வம்; அறிவால் அறிந்த பிறகே காண்பது நிகழ்கிறது. அது