பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

376

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இருந்தால், பொறிகள் தூய்மையாக இருக்கும். புலன்கள் தூய்மையாக இருக்கும். அதனாலன்றோ வள்ளுவம்,

“மனத்துக் கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்”

என்றது. மனம் நிலம் போன்றது. நிலம் உழுது வளப்படுத்தாது போனால் வளம் தராது. ஆனால் உழாத-வளப்படுத்தாத நிலத்தில் புல், பூண்டுகள், முட்செடிகள் முளைக்கும். ஆக, நிலத்தை உரியவாறு பயன்படுத்த வேண்டும்.

அதுபோலவே, மனத்தை உழுது பண்படுத்த வேண்டும். மனத்தின் கண் தோன்றும் கருத்துக்கள், தீய எண்ணங்கள் ஒருநாள், இருநாள் முயற்சியில் மாறா. அவற்றை நாம் விடுக்க முயலும்தோறும் அவை கிளர்ந்து எழும். அதனால் மனத்தை “வஞ்சக் கட்டை” என்கிறார், பட்டினத்தார். நன்மை செய்தல் போலக் காட்டித் தீமை செய்ததால் “வஞ்சக் கட்டை” என்றார்.

மனத்தின் வஞ்சனையை, வஞ்சனையின் தீய எண்ணத்தை முதலற அதாவது வேரற எடுத்தல் வேண்டும். கழனியில் வேளாண்மை செய்யப்புகின் கழனியிற் கிடக்கும் வேளாண்மைக்கு பொருந்தாப் பொருள்களை அகற்ற வேண்டும்.

அதுபோல மனத்திற் கிடக்கும் பொருந்தா எண்ணங்களைத் தூர்வை எடுக்கவேண்டும். நிலத்தில் உரமிட, தண்ணீர் பாய்ச்ச வாய்ப்பாகவும், இடும் உரமும் பாய்ச்சும் தண்ணீரும் பரந்தோடிக் கெடாமல் இருக்கவும் பாத்திகள் அமைத்தல் இயற்கை. அதுபோல மனத்திலும் அன்பு, அறம், தொண்டு ஆகியவகைளைப் பாத்திகளாக அமைத்து ஒன்றினை ஒன்று தழுவித் தொடர்ந்து தொழிற்படச் செய்ய வேண்டும்.

கழனியில் நட்டால் மட்டும் பயிர் வளர்ந்துவிடாது. உரம் இடுதல் வேண்டும். மனம் விளைந்து பயன்தர உண்மை