பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தேடிப் பெறுவதா?

393


அவன் எப்பொழுதும் எக்காலத்தும் எக்காரணத்தாலும் பிரிவதில்லை.

இம்மையோடன்றி மறுமையும் எழுமையும் தொடர்ந்து துணையாக இருப்பவன்-நரகொடு சொர்க்கம் நானிலம் புகினும் பிரியாதவன். அதனாலன்றோ மாணிக்கவாசகர் இறைவனை ‘தனித்துணை’ என்று கூறி வாழ்த்துகிறார். இறைவனைப் பெறுவது எப்படி? பிற சமயங்கள் ‘தட்டினால் கதவு திறக்கப்படும்’ என்று சொல்லும். தட்டும் சக்தி வந்து விட்டால் கதவு திறக்க இன்னொருவரும் வேண்டுமோ? தட்டும் பதவி பெற்ற ஒருவர் அக் கதவினை உதைத்து, உடைத்து உள்ளே நுழைய முடியாதோ? மேலும் தட்டின பிறகு கதவு திறப்பதில் என்ன பெருமை இருக்கிறது? அதற்குக் கருணை என்றா பெயர்? வலிய உதவி செய்யும் (Volunteer Service) பண்பே வாழ்த்தப் பெறுகிறது. நம்முடைய வழிபடும் தெய்வமாகிய முருகன், தட்டாமலேயே கதவு திறப்பவன்; அதனாலன்றோ ‘அவனருளாலே அவன் தாள் வணங்கி’ என்று திருவாசகம் பேசுகிறது! நாம் திருவருளைப் பெற வேண்டும். அவ்வின்பத்தைப் பெற்று வாழவேண்டும் என்று விரும்பி முனைவதைவிட நமக்கு அத்திருவருள் நலத்தை வாரி வழங்கவேண்டும் என்றே திருவுளங்கொண்டுள்ளான் முருகன். வந்த பிறகு வாரி வழங்கவில்லை. இதைத்தான் ‘வாரி வழங்குகின்றான் வந்து முந்துமினே’ என்கிறார் மாணிக்கவாசகர். இக்கருத்தினைத் திருவாசகத்தில் பல இடங்களில் பரக்கக் காண்கின்றோம். இறைவன் திருவருள் வழங்குகின்றமையைப் ‘பால் நினைந் தூட்டும் தாயினும் சாலப் பரிந்தூட்டும்’ என்கிறார். அழுதபின் ஊட்டும் தாய் அவ்வளவு சிறப்புடையளல்லள். அழாமலேயே காலத்தையும் பசியையும் கருத்திற்கொண்டு நினைந்தூட்டும் தாய் சிறப்பானவள். இறைவனாகிய தாயும், இத்தகைய தாயையும்விடச் சிறந்த முறையில் அருள் வழங்குகின்றான். ‘நினைந்தூட்டும் தாயினும்’ என்ற வரி நினைந்து நினைந்து மகிழத்தக்கது. இந்த

கு.இ.26.