பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

402

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்பதை எங்ஙனம் மறுக்க இயலும்? செழுந்தமிழ் வழக்காகிய சிவநெறி உள்பொருள்-என்றும் உள்பொருள் - தோற்றமும் மறைவும் இல்லாத பொருள். மூன்று என்ற கொள்கையுடையது. அவை முறையே உயிர், ஆணவம், கடவுள் ஆகியன. இம் மூன்றினைப் பற்றிய தெளிவான அறிவு இருந்தால் நமது வாழ்வினை அமைத்துக் கொள்ளவேண்டிய நெறிமுறைகள் தோன்றும்; வாழ்வு சிறக்கும்!

கடவுள் முதற் பொருள். கடவுளைப் பற்றிய அறிவு நமக்கு அவசியமே. ஆயினும் கடவுளைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்பு, உயிர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுவது நல்லது. தம்மை உணர்ந்து, தம்மையுடைய தலைவனை உணர்தலே வழிமுறை.

உயிர்கள் இயற்கையாக உள்ளன; என்றும் உள்ளன. உயிர்கள் தோற்றம் இல்லாதன; அறிவு இல்லாதன. உயிர்களுக்குப் பிறப்பும் இல்லை; இறப்பும் இல்லை. உயிர்கள் பலப்பல. இவை தமிழ் நெறிய தத்துவக் கொள்கை. செந்தமிழ்க் குமரகுருபரர் ‘மன்னுயிர்த் தொகுதி’ என்று குறிப்பிடுகின்றார். மன்னுதல்-நிலை பெறுதல்-என்றும் நிலைபெற்று விளங்குதல் என்பது பொருள். ‘மன்னுயிர்த் தொகுதி’ என்றதால் உயிர்கள் பலப்பல என்ற கருத்தையும் உணர்த்துகின்றார். உயிர்கள் பலப்பல மட்டும் அல்ல. பலவகையின என்ற கொள்கையும் உணர்த்தப் பெறுகிறது. இதனைப் ‘பல்லுயிர்த் தொகுதி’ என்று கூறி விளக்குகின்றார்.

“முட்டையிற் கருவில் வித்தினில் வெயர்ப்பில்
நிற்பன நெளிவ தத்துவ தவழ்வ
கடப்பன நடப்பன பறப்பன வாகக்
கண்ணகன் ஞாலத் தெண்ணில்பல் கோடிப்
பிள்ளைகள் பெற்ற பெருமனைக் கிழத்திக்கு
நெல்லிரு நாழி நிறையக் கொடுத்தாங்கு”

(சிதம்பரம் மும்மணிக்கோவை 464:15-20)

என்ற பாடல் அடிகளில் விளக்குவதை அறிக.