பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

406

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஆராய்ந்து மிகுதி நோக்கிப் பாராட்ட வேண்டும்; போற்ற வேண்டும்; ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது திருவள்ளுவர் கருத்து.

“குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்”

(504)

என்பது திருக்குறள்.

குறைகளைத் திருத்தும் வழி, குறைகளைத் துாற்றுதல் அல்ல. ஒருவரிடமுள்ள குறைகளை எடுத்துத் தூற்றுவதைத் திருவள்ளுவர் “சிறுமை” யென்றே கண்டிக்கின்றார்.

“அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்”

(980)

என்றும், “வடுக்காண வற்றாகும் கீழ்” என்றும் திருவள்ளுவர் அருளிச் செய்துள்ளமை அறியத் தக்கன. அங்ஙனமாயின் குற்றங்களை எடுத்துக் காட்டித் திருத்தாமல் குற்றங்களுக்கும் உடந்தையாக இருக்கவேண்டும் என்பது கருத்தா? அப்படியன்று, குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தால் குறை நீக்கம் நிகழாதல்லவா? இழிவுபடுத்தும் நோக்கத்தோடு குற்றத்தை எடுத்துக் காட்டுதல் தவறு. பழிதூற்றும் எண்ணத்தோடு, குற்றத்தை எடுத்துக் கூறுதலும் தவறு.

மாறாக அவரிடமுள்ள குணங்களைப் பாராட்டி மனம் நிறைந்த உறவினைப் பெற்று அவ்வழி நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு தோழமை உணர்வில் வடுப்படாமல் பைய குற்றங்களினின்றும் தேற்றி, விலக்கி நிறைகளைப் பெறத் துணை செய்யவேண்டும்.

அறியாமை மிக்குடைய உயிர்களைத் திருத்தும் திருவருள் “பையத் தாழுருவி” என்பார் மாணிக்கவாசகர். திருஞான சம்பந்தர், மதுரையில் தமது திருமடத்தில் பகைவர் தீவைத்தபொழுது “பையவே சென்று பாண்டியர்க்காகவே” என்றார்.