பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெரியோர் செயல்!

415



“தனக்கு மிஞ்சியதே தான தர்மம்” என்ற பழமொழி தமிழகத்து வழக்கில் பிறந்ததன்று, “தன்னை மிஞ்சியதே தான தர்மம்” என்பதுதான் உண்மையான பழமொழி.

உதவி செய்வதென்பது, பொருள் இருந்தால்தான், என்பதில்லை! அநேகமாக நிறைந்த பொருள்வளம் உடையவர்களில் மிகக் குறைந்தவர்களுக்கே உதவி செய்யும் இயல்பு இருக்கும்.

மிகக் குறைந்த வருவாயுடையவர்களும், வாழ்க்கைப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களும்கூட உதவி செய்ய வேண்டும். ஏன்? பொருளில்லையானாலும், பொருள் தேடுதற்குரிய உடலாற்றல் இருக்குமானால் பொருளைத் தேடி வந்தும் உதவி செய்ய வேண்டும்.

“இல்லென்று இரப்போர்க்கு இயைவது கரத்தல்
வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும்
பொருளே காதலர் காதல்”

என்பது அகநானூறு.

வழங்குதற்காகவே பொருளீட்டுதல் என்பது ஒரு கொள்கை இல்லை, ஓர் அறம்! புறநானூறு “செல்வத்தின் பயன் ஈதல்” என்று பேசும். உண்ண உணவில்லாத நிலையிலும் வயலில் விதைத்த வித்தை அரித்துக் கொண்டு வந்து சமைத்து உணவு வழங்கிய இளையான்குடி மாற நாயனார் வரலாறும், கற்புடை மகளிர்க்குரிய மங்கல அணியை மாற்றியும் உதவி செய்த குங்குலியக் கலய நாயனார் வரலாறும் நினைவிற் கொள்ளத் தக்கன. ஏன்? நன்னெறி ஆசிரியர் நமது உடம்பிலேயே இதற்கோர் உவமை காட்டி விளக்குகிறார்.

நாக்கு, தானே பூரணமாக ஒன்றைச் சுவைத்தற்கு இயலாது. நாவிற்குப் பூரணமான சுவையை வழங்கப் பற்கள் துணையாயமைந்து மிகக் கடினமான பதார்த்தங்களையும்