பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

434

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அழுத வள்ளலார் வரை ஓர் அருள் ஒழுக்கப் பாரம்பரியம் வளர்ந்து வந்திருக்கிறது. வள்ளற் பெருமான், தமக்கு முன்பே தோன்றிய நால்வர் பெருமக்களை நினைந்து நினைந்து நெஞ்சுருகப் பாடுகின்றார். தம்மை அந்த வழிவழி மரபில் வந்த திருக்கூட்டத்தைச் சேர்ந்தவரென்று சொல்லிக் கொள்வதில் பெருமையடைகின்றார்.

“வாழையடி வாழையென வந்ததிருக் கூட்ட
மரபினில்யா னொருவன் அன்றோ?”

என்பது அவர் திருப்பாடல். எனவே, வள்ளற் பெருமான் வழிவழி மரபில் தோன்றி, தமது மரபுக்குப் புதுமையும் பொதுமையும் சேர்த்தவர்.

நாம் வாழும் இந்தத் தலைமுறை வரலாற்றுச் சிறப்புடையது. ஏன்? பத்தொன்பதாம் நூற்றாண்டில் வள்ளலார் தோன்றி ஒரு சமய மறுபலர்ச்சி இயக்கத்திற்குக் கால்கோள் செய்தார். தமிழக வரலாற்றில் பத்தொன்பதாம் நூற்றாண்டில், வள்ளற் பெருமான் நமது சமயத்தில்-சமூகத்தில் தேங்கிக் கிடந்த உணர்வுகளுக்கு ஒளியூட்டி எழுச்சி தந்தார்; ஏற்றம் தந்தார். வள்ளலார் சீர்திருத்தம் செய்ய விரும்பினார். அவர் விரும்பிய சீர்திருத்தம் முறையானது. இன்று, பலர் சீர்திருத்தம் பேசுகின்றனர்; செய்ய முனைகின்றனர். ஆனால், அவர்களுக்குச் சீர்திருத்தத்திற்குரிய அடிப்படைக் களங்களில் நம்பிக்கை இல்லை-அல்லது ஊசலாட்டம் இருக்கிறது. நம்பிக்கையில்லாதவர்கள் அல்லது ஊசலாட்டம் உள்ளவர்கள் சீர்திருத்தம் செய்யப் புகுவது சமய வழிப்பட்ட சமுதாயத்திற்குப் பேரிழப்பைத் தரும். பெர்னாட்ஷா, “களை பிடுங்க இறங்குபவர்கள் களை, பயிர் இவற்றின் வேறுபாடுகளைத் தெரிந்து கொண்டு இறங்க வேண்டும்” என்றார். அங்ஙனம் தெரியாது இறங்குபவர்கள் பயிரைக் களை என்று பிடுங்கினாலும் பிடுங்கி விடுவர். வள்ளற் பெருமான் காலங்கடந்த பழைமையிற் காலூன்றி நின்றவர். ஆயினும்,