பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

448

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இன்றியமையாதது. “சிந்தையுள் தெளிவுமாகித் தெளிவினுட் சிவமுமாகி” என்பார் அப்பரடிகள். “தெய்வம் தெளிமின்” என்பார் இளங்கோவடிகள். இருளிலிருந்து - அறியாமையிலிருந்து மீள்வதற்குரிய தெளிவுண்டெனில், அத்தெருளைத் தெளிவை வழங்கியருள் தேவசிகாமணிச் சிற்குரு உண்டு!

தேவசிகாமணிச் சிற்குருவின் அருட் பார்வையில் ஆன்மாக்களிடம் தெளிவு தோன்றுகிறது; அறியாமை அகலுகிறது; ஞானம் தலைப்படுகிறது. ஞானம் தலைப்பட்டவுடன் இருள் அகலுகிறது. இருள் அகன்றவுடன் நல்ல பொருள் கிடைக்கிறது. நல்ல பொருள் கிடைத்தவுடன் அறம் தலைப்படும் வாழ்க்கை தொடங்குகிறது. அறத்தின் வழியதாக அருள்நலம் கிடைக்கிறது. இவையெல்லாம் கிடைப்பதற்குக் காரணம் தெய்வசிகாமணி தேசிகேந்திர குருமூர்த்தியின் கடைக்கண் பார்வையேயாம்!

“அருள் உண்டு எனில் உண்டு அறங்க ளெல்
லாம்; அவ் வருளும் நல்ல
பொருள் உண்டு எனில் உண்டு; போகியர்க்
கேயிவர் போகமல
இருள் உண் டெனில் உண்டுஇங் கெல்லாம்
வராமல் இருந்தும் ஒரு
தெருள் உண்டு எனில் உண்டு தேவ
சிகாமணிச் சிற்குருவே!”

என்பது நமது ஆதீன முதல்வராகிய அருள்தரு தெய்வ சிகாமணி நான்மணி மாலை என்னும் நூலின் திருப்பாடல்களில் ஓர் அருட்பாடல்!