பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

219



சுந்தரரர் திருவாரூர்த் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவனை வணங்க வருகிறார். திருவாரூர்த் திருக்கோயிலில் தேவாசிரிய மண்டபத்தில் விண்ணவர்களுடன் எண்ணற்ற அடியார்கள் கூடியிருந்தனர். ஆம்! எண்ணற்ற அடியார்கள்! அன்று அடியார்களின் அளவுக்குக் குறைவு இல்லை. இன்று எங்கே என்று தேடிக்கண்டு பிடிக்க வேண்டியிருக்கிறது. அதனால்ன்றோ திருமடங்களுக்கு வாரிசுகளைத் தேர்ந்தெடுப்பதில் கூட இடர்ப்பாடு ஏற்படுகிறது. இன்று பத்திமையிலும் தொண்டிலும் ஈடுபட்டு வளர்ந்து வாழும் மனப்போக்கைச் சூழ்நிலை கெடுத்திருக் கிறது. சுந்தரர், தேவாசிரிய மண்டபத்துக்குள் கூடியிருக்கும் அடியார்கள் கூட்டத்தைப் பார்க்கிறார். ஆரூரர்க்கு அடியார்களைச் சென்று வணங்கவும் அவர்களுக்கு ஏவல் செய்யவும் விருப்பம் மேலிடுகிறது. ஆயினும் பரமன் தாள்பணியும் ஆர்வம் தலையெடுத்ததால் திருக்கோயிலுக்கே சென்று விட்டார். ஆரூரரின் விருப்பத்தை அறிந்த பெருமான் அடியார்களை அறிமுகப்படுத்தி வணங்கி வாழ வழி காட்டுகிறார்.

பெருமான், உலகியலைச் சார்ந்த அறிமுகக் கலையில் தேர்ந்து விளங்குகிறார். திருவுள்ளம் நிறைந்த நிலையில் அறிமுகப் படுத்துகிறார். "அடியார்களின் பெருமை தம் பெருமையை ஒத்தது. அடியார்கள் தம்மை நெஞ்சத்திற் பெற்றுப் பேணலால் தம்ம்ை உரிமையாக உடையவர்கள்; ஒருமையுணர்வால் உலகை வென்று விளங்குகிறவர்கள்; யாதொரு குறையும் இல்லாதவர்கள்; அருமை என்று அறிந்து பாராட்டக் கூடிய நிலையில் நிற்கின்றவர்கள்; அன்பினால் இன்பம் அனுபவிக்கிறவர்கள். இம்மையும் மறுமையும் கடந்து நிற்கின்றவர்கள். அவர்களைச் சென்றடைக” என்று தம்மையடைந்த ஆரூரரை ஆற்றுப்படுத்துகின்றார். என்ன அற்புதம்! அடியார்களை இறைவன் அறிமுகப்படுத்தும் பாங்கைப் பாருங்கள்! இதுவன்றோ தோழமை !