பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

300

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சேக்கிழார், வரலாற்றை விரைவாக நடத்துகிறார். சங்கிலியார் பருவம் தோறும் முறையாக வளர்ந்து நங்கையாகிறார். மணப்பருவம் வந்துவிட்டது. பெற்றோர்கள் திருமணப்பேச்சில் ஈடுபடுகின்றனர். சங்கிலியாருக்குத் திருமணப்பேச்சு பிடிக்கவில்லை. சங்கிலியார் தமது பெற்றோர்களிடம் தமக்கு ஈசன் திருவருள் பெற்ற ஒருவரே கணவராதலுக்கு உரியவர். தாம் ஈசன் திருவருள் பெற்ற ஒருவருக்கே வாழ்க்கைத் துணை நலமாக அமைய இயலும் என்பதைத் தெளிவுறுத்தினார். அதோடு அமையாது திருஒற்றியூர்த் திருத்தலத்திலிருந்து சிவபெருமான் வேட்டு நிற்கும் பணியில் ஈடுபட விரும்புவதையும் கூறினார். மகள் பேச வந்தவர்களிடம் யாது கூறுவது என்ற ஐயப்பாடு பெற்றோர்களுக்கு! சங்கிலியார் கூறுவதை அப்படியே சொல்வதும் நாகரிகமன்று. வருத்தம் வாராமலும் சொல்ல வேண்டும் என்ற சிந்தனைகள் அலை மோதுகின்றன. விடை சொல்வது பெரிதல்ல. தீமை பயக்காதவாறு சொல்ல வேண்டும் என்பதே முக்கிய செய்தி. ஏதம்-உறவினர்கள் பழகுபவர்களிடம் ஏற்படும் பிணக்கும் அதனால் வரக்கூடிய கேடுகளும் ஆம்! இந்தக் காரணத்திற்காக உண்மையை உள்ளவாறு சொல்லாமலும் இருக்கலாம். "புரை தீர்ந்த நன்மை” என்ற திருக்குறள் நெறி உணர்க. இத்தகு இடர்ப்பாடு களையும் சங்கிலியாரை மணம் பேச வந்தோர் துன்புற்ற நிகழ்வுகளையும் கண்ட சங்கிலி நாச்சியாரின் பெற்றோர் சங்கிலி நாச்சியாரை திருவொற்றியூரில் கன்னி மாடம் அமைத்து அந்தக் கன்னி மாடத்தில் இருக்கச் செய்வதென்று துணிந்தனர்; முன் வந்தனர். திருவொற்றியூரார் இசைவுடன் வசதிகள் பலவும் உடைய கன்னிமாடம் அமைக்கப் பெற்றது. கன்னிமாடத்திற்குத் தேவைப்படும் பொருள்களும் தொகுத்து வைக்கப் பெற்றன. முறையான காப்பு வசதிகளுடன் அமைந்த கன்னி மாடத்தில் சங்கிலிநாச்சியார் ஈசருக்கேற்ற பணி