பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

308

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


படுத்துவார்கள் இதுவே உலக வழக்கு! அதுபோல் ஒற்றியூர் இறைவா, நீ ஏன் எனக்கருள் செய்யக்கூடாது? அழுக்குடம்புடன் உன் சந்நிதி அடைந்தேன். நான்பிழைகள் செய்தது, செய்வது உண்மை. ஆயினும் நின் திருவடியை மறக்கும் பிழையை நான் செய்ததில்லை. வாழ்க்கையில் வழுக்கி வீழ்ந்தாலும் உன்னுடைய திருநாமத்தை மறந்ததில்லை. ஒற்றியூர் இறைவா! என்னுடைய கண் நோய்க்கு ஒரு மருந்து கூறு!" என்று ஊன் உருக உயிர் உருகப் பாடியருளுகின்றார் நம்பியாரூரர். உலக வழக்கினை ஒத்தே சிந்திக்கின்றார். நம்பியாரூரர் கண்களை இழந்தது சபதம் மீறியதற்காகத்தான்! ஆனால் நம்பியாரூரரோ சங்கிலிக்காகப் பரிந்து கண்களை இறைவன் பறித்துக் கொண்டதாகக் கூறுகின்றார். மீண்டும் திருவடிப் பிழையா நிலையை எடுத்து வற்புறுத்துகின்றார். இந்தப் பதிகம் முழுதும் உறவும் உரிமையும் இணைந்து குரல் கொடுக்கும் பாடல்கள்தான். கண்ணொளி இழந்தார். ஆனால் ஆன்ம ஒளி இழக்கவில்லை. திருவாரூர் காணும் வேட்கை தணியவில்லை. சாலைவழிச் செல்வோர் வழிகாட்ட திருவாரூர்ப் பயணத்தைத் தொடங்கிவிட்டார். வழியில் திருமுல்லைவாயில் திருத்தலத்தை அடைகின்றார். திருமுல்லைவாயிலில் பாடியருளிய பதிகத்திலும் சங்கிலிக்காக இறைவன் கண்களைப் பறித்துக்கொண்டான் என்றே பாடுகின்றார். திருநெடுவெண்பாக்கம் செல்கின்றார். நம்பியாரூரருக்கு ஆற்றாமை மீதுர்கிறது. ஆதலால் நெடு வெண்பாக்கத்தில் பாடிய பதிகத்தில் இறைவனை நோக்கி, "நீர் மகிழ்ந்து கோயிலுக்குள் இருக்கிறீர் அல்லவா?" என்று வினவுகின்றார். இறைவன் திருவுளங் கொண்டு ஊன்றுகோல் ஒன்றருள்கின்றான். ஆயினும் இறைவனிடமிருந்து ஊன்று கோல் தான் கிடைத்தது. இணக்கமான எதுவும் கிடைக்க வில்லை. பகைவன் போல "உளோம் போகீர்" என்றான். ஊன்றுகோல் கிடைத்த மகிழ்ச்சியில் நம்பியாரூரர் "பிழையுளன பொறுத்து அருள்வர்" என்று பாடினார்.