பக்கம்:குமண வள்ளல்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

குமண வள்ளல்

அவன் நன்றாக வாழவேண்டுமென்று விரும்பினான்; அந்த விருப்பத்தை அறிந்து நாமே அவனுக்கு நாட்டின் ஒரு பகுதியைப் பிரித்துக் கொடுத்தோம். இப்போது, இந்த நாடு முழுவதையும் அவன் ஆள வேண்டும் என்று விரும்புகிறான். அந்த விருப்பத்தையும் நிறைவேற்றிவிட்டால் ஒரு தொல்லையும் இல்லையே! அவன் போர் செய்து வெல்வதானால் அவனுக்கும் பழிதான் உண்டாகும். அவனுக்கு நாடு முழுவதையும் நல்கிவிட்டால் போரால் விளையும் தீங்கினின்றும் இரு நாட்டினரும் உய்வதோடு, நமக்கும் புகழ் உண்டாகும்.

இந்த எண்ணம் அவனுடைய மயக்கத்திலே ஓரளவு தெளிவை உண்டாக்கியது. அந்தக் கருத்தையே உறுதி செய்துகொண்டான். தன் தம்பிக்கு அவன் மறுமொழி எழுதியனுப்பினான். “போர் செய்வது எதற்கு? உனக்கு நாடு முழுவதும் வேண்டும் என்றால் நீயே எடுத்துக்கொள். நமக்குள் போர் உண்டானல் யார் வென்றாலும் யார் தோற்றாலும் உலகம் பழிக்கும். இந்த நாட்டை நீ ஆண்டால் என்ன? நான் ஆண்டால் என்ன? இரண்டும் எனக்கு ஒன்றுதான்” என்று ஓலை எழுதி ஒரு தூதுவனிடம் கொடுத்தனுப்பினன்.

ஓலை இளங் குமணனை அடைந்தது. அவன் அதைப் பார்த்தான். அவனுக்கு ஒரு வகையில் ஏமாற்றம் உண்டாயிற்று. ‘இவ்வளவு முயன்று நாம் ஒரு படையைச் சேர்த்தோமே! அதற்கு வேலை இல்லாமல் போய்விடும்போல் இருக்கிறதே!’ என்ற ஏமாற்றந்தான் அது. தன்னுடைய அமைச்சர்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/90&oldid=1362743" இலிருந்து மீள்விக்கப்பட்டது