பக்கம்:குமரிக்கோட்டம், அண்ணாதுரை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

குமரிக் கோட்டம்


வண்ணம் இருந்தன. ஒவ்வோர் செய்தியும் செட்டியாருக்குச் செந்தேள்தான்! துடித்தார், அவன் துயரமின்றிச் சந்தோஷமாக வாழ்கிறான் என்று கேட்டு, தகப்பனார் மகன் விஷயமாகக் கொள்ளக்கூடிய உணர்ச்சியல்ல தான். ஆனால் குழந்தைவேல் செட்டியார், பழனியைத் தன் மகன் என்று எண்ணவில்லை; தன் பணத்தை அலட்சியப் படுத்திய ஆணவக்காரன் என்றே எண்ணினார்.


"இருக்கட்டும் இருக்கட்டும்; அவள் எத்தனை நாளைக்கு இவனிடம் ஆசைகாட்டப் போகிறாள்? 'முதலிலே கோபித்துக்கொண்டாலும் பிறகு சமாதானம் ஆகிவிடுவார், அப்போது சொத்துப் பழனிக்குத் தரப்படும், நாம் சொகுசாக வாழலாம்' என்று அந்தச் சிறுக்கி எண்ணிக்கொண்டுதான், என் மகனைத் தன் வலையிலே போட்டுக்கொண்டாள். கடைசிவரை ஒரு பைசாகூட நான் தரப்போவதில்லை என்று தெரிந்தால், 'போய்வாடா' என்று கூறிவிடுவாள்; பயல் வந்து சேருவான். பணத்தாசையால் தானே அவள் அவனை மயக்கிவைத்தாள்" என்று எண்ணி, மனத்தைத் தேற்றிக்கொள்வார். அவருக்கென்ன தெரியும், அவர்கள் சிருஷ்டித்துக்கொண்ட இராச்சியத்திலே, பணத்துக்கு அல்ல மதிப்பு என்பது!

🞸 🞸 🞸

மறையூர், நால்வரின் பாடல் பெற்ற ஸ்தலமல்ல; ஆனால் அதற்கு அடுத்த படிக்கட்டிலிருந்த அடியார்கள் பலர், அந்த க்ஷேத்திரத்தைப்பற்றிப் பாடியிருக்கிறார்கள். அங்கிருந்த ஒரு மண்மேடு, ஒரு காலத்தில் மால்மருகன் கோயிலாக இருந்ததென்று வைதிகர்கள் கூறுவர்.