பக்கம்:குமரிக்கோட்டம், அண்ணாதுரை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

குமரிக் கோட்டம்


இந்தக் கோயில் கட்டும் வேலையிலே ஈடுபட்டுக்கொண்டிருந்த வேலையாட்களிலே பெண்களும் ஏராளம். அவர்களிலே, குமரி ஒருத்தி. மாநிறம், ஆனால் உழைப்பால் மெருகேறின உடல், குறுகுறுப்பான பார்வை, இயற்கையான ஓர் புன்னகை தவழ்ந்தபடி இருக்கும். என்ன வேலை செய்துகொண்டிருந்தாலும் மெல்லிய குரலிலே ஏதாவது பாடிக்கொண்டே இருப்பாள். இருபதுக்குள் தான் வயது. பருவ கர்வத்துடன் விளங்கும் அப்பாவையின் பார்வையிலேயே ஓர்வித மயக்கும் சக்தி இருந்தது. கொச்சைப் பேச்சோ, வேதாந்திக்குக் கூட இச்சையைக் கிளறிவிடுவதாக இருக்கும். அவள் கோபமே கொள்வதில்லை.

"ஏலே! குட்டி! என்ன அங்கே குரங்கு ஆட்டம் ஆடறே!" என்று மேஸ்திரி முத்துசாமி மிரட்டுவான். குமரி பயப்படவுமாட்டாள், கோபிக்கவுமாட்டாள். "அண்ணி, காலையிலே சண்டைபோட்டுதா?" என்று கேலி பேசுவாள். கடைக்கண்ணால் பார்ப்பது குமரிக்கு வழக்கமாகிவிட்டது. கடைக் கண்ணால் பார்த்துக் கொண்டே, முகவாய்க்கட்டையில் கைவைத்துவிட்டு, கழுத்தை ஒரு வெட்டு வெட்டி, "அடே, அப்பா! காளைமாடு மாதிரி விழிக்கிறான் பாரு. ஏமாறுகிறவ நான் இல்லை. அதுக்கு வேறே ஆனைப் பாருடா. ராசா தேசிங்கு" என்று குறும்பாகப் பேசுவாள், யாராவது அவளிடம் கொஞ்சம், அப்படி இப்படி நடக்க நினைத்தால்.

"குட்டி, பார்ப்பதும் சிரிப்பதும், குலுக்கி நடப்பதும், வெடுக்கென்று பேசுவதும் பார்த்தா,