பக்கம்:குமரிக்கோட்டம், அண்ணாதுரை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி.என். அண்ணாதுரை

49


வயது என்ன! வாழ்க்கை எப்படிப்பட்டது ! எவ்வளவு பாசுரம் படித்தோம். எத்தனை திருக்கோயில் வலம் வந்தோம்? காமத்தின் கேடுபற்றி எத்தனை புண்ணிய கதை படித்திருக்கிறோம்? ஒரு கன்னியை, —அவள் நிலை தவறும்படி செய்வது தகுமா? இவ்வளவு மோகாந்த காரத்தில் மூழ்குவது சரியா?" என்று சிந்திக்கத் துளியும் முடியவில்லை.

அவளுடைய அதரம், அதன் துடிப்பு! அவளுடைய விழிகள், அவை கெண்டைபோல ஆடுவது! அவளுடைய துடியிடை! குழையும் பேச்சு! இவைகளைக் கண்டு, ரசித்துக்கொண்டிருந்த நேரத்தில் அவருக்கு வேறு விதமான நினைப்பு வருமா!

எந்த வாயால், "காமத்துக்குப் பலியாகி ஜாதியைக் கெடுக்கத் துணிந்தாயே, நீ என் மகனல்ல, என் முகாலோபனம் செய்யாதே, போ வீட்டை விட்டு" என்று கூறினாரோ அந்த வாயால், செட்டியார், அழகுக்கு அர்ச்சனை செய்துகொண்டிருந்தார். காதல் கீதம்பாடிக் கொண்டிருந்தார். "இது இதழல்ல கனி; கன்னமல்ல ரோஜா; கண்ணல்ல தாமரை," என்று கவிதைகளைப் பொழிந்துகொண்டிருந்தார். தூங்கிக் கிடந்த ரசிகத்தன்மை முழுவதும் வெள்ளமெனக் கிளம்பிற்று. இன்ப இரவு அவருக்கு! அவளுக்கோ, ஏமாந்த இரவு ! அவள் அறியமாட்டாள், காமத்துக்குத்தான் பலியாக்கப் படுவதை. அவள் ஏதோ ஓர் உலகிலே சஞ்சாரம் செய்து கொண்டிருந்தாள். அந்த உலகிலே நிற்கமுடியவில்லை; கண்கள் சுழன்றபடி உள்ளன; ஏதோ ஓர் வகைக் களிப்பிலே மூழ்கி மூழ்கி எழுந்திருக்க வேண்டி இருக்கிறது. காரணம் தெரியவில்லை களிப்புக்கு. ஆடலும் பாடலும்

4