பக்கம்:குமரிக்கோட்டம், அண்ணாதுரை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாதுரை

53


துடித்துக்கொண்டு, அவன் கால்களைப் பிடித்துக் கொண்டாள் குமரி.

"சீ ! நாயே! குலத்தைக்கெடுத்த கழுதே" என்று கூவி காலை உதறினான்; குமரி ஒருபக்கம் போய் வீழ்ந்தாள்.

"நடந்தது நடந்துவிட்டது! ஏனய்யா செட்டியாரே! அவ்வளவுதான் உனக்குச் சமாதானம் கூறக் தெரிந்தது? எவ்வளவு திமிர் இருந்தால், ஒரு கன்னிப் பெண்ணைக் கற்பழித்துவிட்டு, ஏதோ கைதவறிக் கீழே உருண்டு விட்டதால் செம்பிலே இருந்த பால் கீழே கொட்டிவிட்டதற்குச் சமாதானம் சொல்வதுபோல, நடந்தது நடந்துவிட்டது என்று கூறத் துணிவு பிறக்கும் உனக்கு? என்னை வெளியூர் போகச்சொல்லி விட்டு, விடிவதற்குள், இவளை விபசாரியாக்கி விட்டாய். நடந்தது நடந்துவிட்டது ! நாயே! இனி நடக்க வேண்டியதைச் சொல்;" என்று செட்டியார் மீது பாய்ந்தான். அவர் அவன் காலில் விழுந்து, "அப்பா! நீ என்னை எது செய்தாலும் தகும். நான் செய்துவிட்ட அக்ரமத்துக்கு எவ்வளவு வேண்டுமானாலும் என்னைத் தண்டிக்கலாம். காமாந்தகாரத்தால் நான் இந்த அந்நியாத்தைச் செய்து விட்டேன்," என்று புலம்பினார்.

"காமாந்தகாரம் ! அதை இந்த ஏழைப் பெண்ணிடம் காட்டவா, கோயில் ! ஊரெல்லாம் உன்னை உத்தமன் என்று புகழ்கிறது; பாவி, நீ என் குடும்பத்துக்குச் சனியனாக வந்தாயே நடந்தது நடந்து விட்டது என்றாயே! நினைத்துப் பாரடா பாதகா, நீ செய்த காரியத்தை. ஏமாளிப்பெண் ஒருத்தியை, ஏழையை. கூலிவேலை செய்ய வந்தவளைக் கற்பழித்திருக்கிறாய்.