பக்கம்:குமரிக்கோட்டம், அண்ணாதுரை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

குமரிக் கோட்டம்


வாழ்ந்த குடும்பம். எங்கள் குடும்பத்திலே ஜாதியைவிட்டு ஜாதியில் கலியாணம் செய்வதில்லையே."

"எங்கள் குலத்திலும் குடும்பத்திலும் காமப்பித்தம் பிடித்தவர்களுக்குப் பலியாவதற்காகப் பெண்களைப் பெற்றெடுக்கிறார்களா? என்ன திமிர் உனக்கு? உன்னிடம் அதிகம் பேசப்போவதில்லை. ஒரு வாரத்துக்குள், முடிவு சொல்லியாக வேண்டும்; இல்லையானால், உன்னையும் இந்தக் கள்ளியையும் கொன்றுவிட்டு, நானும் சாகவேண்டியதுதான். சொக்கன் சொன்னால் சொன்னதுதான்."

சொக்கன் குமரியை இழுத்துக்கொண்டு வெளியே சென்றான் புலி போல. செட்டியார் கவிழ்ந்து படுத்துக் கொண்டு கதறினார்.

                 *          *           *

இச்சம்பவம், ஜாடை மாடையாகக் கூலியாட்களுக்குத் தெரிந்துவிட்டது. கோபத்தால் சிவந்த கண்களுடன் சொக்கன் இருந்தது கண்டு, சகலருக்கும் பயம் பிடித்துக்கொண்டது. ஒரு வார்த்தை கேலி பேசினாலும் போதும், சொக்கன் கொன்றுவிடுவான் என்று அஞ்சினர். மீனா வேலைக்கே வரவில்லை, குமரிக்கோ காய்ச்சல். செட்டியாரோ, சாவு வரவில்லையே என்று தவித்தபடி இருந்தார். ஒன்று, இரண்டு, மூன்று என்று நாட்களை எண்ணிக்கொண்டிருந்தான் சொக்கன்.

ஐந்தாம் நாள் அதிகாலையில் சொக்கன் திடுக்கிட்டுப் போனான். குமரியைக் காணாமல்; எங்கெங்கோ தேடிப் பார்த்தான், கிடைக்கவில்லை; செட்டியாரிடம் சென்றான், "குமரி எங்கே?" என்று கேட்டான்.