பக்கம்:குமரிக்கோட்டம், அண்ணாதுரை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

குமரிக் கோட்டம்


கிராமத்தானொருவன், அவளுக்குக் கஞ்சி கொடுத்து, 'யார், என்ன' என்று விசாரித்தான். "ஓடிவந்து விட்டேன்— குடும்பச் சண்டை" என்றாள் குமரி, "தாலி இல்லையே" என்று அவன் கேட்டான். "கட்ட வில்லை" என்று குமரி கூறிவிட்டு அழுதாள்.

"அழாதே பெண்ணே, இந்தப் புத்தி முதலிலேயே இருக்கவேண்டும். போனது போகட்டும். என் வீட்டுக்கு வா; அங்கே ஊருக்கு உபகாரம் செய்யும் உத்தமர் ஒருவர் வந்திருக்கிறார். அவரிடம் நியாயம் கேட்போம் வா" என்று ஆறுதல் கூறிக் குமரியை அவன் அழைத்துச் சென்றான். குமரிக்கு அவன் பேச்சும் ஒருவிதமான லேகியமோ, என்று பயமாகத்தான் இருந்தது. அவன் குறிப்பாக அதை உணர்ந்து "நான் உன் தகப்பன்போல, பயப்படாமல் வா" என்று தைரியம் கூறி வீட்டுக்கு அழைத்துச் சென்றான். அவன் வீட்டுத் திண்ணையிலும், மேடையிலும் கிராமத்து மக்கள் ஐம்பது அறுபது பேருக்குக் கூடியிருந்தார்கள். அவர்களிடம் அன்புடன் பழனி பேசிக்கொண்டிருந்தான்.

"ஐயாவுக்குத்தானே சொல்வது. உலகத்திலே நடக்கிற அநீதிகளை எல்லாம் சொல்லிவாரிங்களே. இதோ இந்தக் கொழந்தை சொல்ற அன்யாயத்தைக் கேளுங்க. கேட்டுவிட்டு ஒரு வழி சொல்லுங்க" என்று கிராமத்தான் பழனியிடம் கூறினான். பலபேர் எதிரிலே தன் கதையைக் கூற, அவள் கூச்சமடைவது தெரிந்த பழனி, கூட்டத்தைக் கலைந்துபோகச் சொல்லிவிட்டு. குமரியின் சேதியைக் கேட்டுத் தெரிந்துகொண்டு திகைப்படைந்தான்.